லம்போகினி காரை வெறும் 100 ரூபாய்க்கு வாங்கிய ஸ்காட்லாந்துகாரர்! ஆனால் அதன் பின்பு நடந்த சோகம்?!

‘லம்போகினி கார் யாருக்கெல்லாம் பிடிக்கும்; கை தூக்குங்க’ என்றால், நிச்சயம் அந்த லிஸ்ட்டில் நீங்களும் இருப்பீர்கள்! அந்தக் காளையின் லோகோவைப் பார்த்தாலே முதுகு சில்லிடும்!

5,000 சிசி இன்ஜின்… V10… அதாவது 10 சிலிண்டர் (நாம் ஓட்டுகிற சாதாரண காரில் 4 தான் பாஸ் இருக்கும்!)... 471 குதிரை சக்தி… என்று டெக்னிக்கல் அம்சங்களிலேயே புல்லரிக்க வைக்கும். இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 3 கோடியில் இருந்து 4 கோடி வரை. அப்படிப்பட்ட லம்போகினியில் வெரைட்டியான மாடல்கள் இருப்பது பலருக்குத் தெரியும். ஆனால், மேலே சொன்ன டெக்னிக்கல் அம்சங்களைச் சொன்னதும், அட ‘ஹூராகேன்’ என்று நிமிர்ந்து உட்கார்வார்கள் கார் ஆர்வலர்கள். அப்படிப்பட்ட லம்போகினியை வாங்குவது… இல்லை இல்லை ஒரு தடவையாவது ஓட்டிவிட வேண்டும் என்று வாழ்நாள் லட்சியம் கொண்டவர்களெல்லாம் இருக்கிறார்கள்!

‘பில்ட்அப் விடாம விஷயத்துக்கு வா தம்பி’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த க்ராண்ட் பர்னட் என்கிற 24 வயது இளைஞர் ஒருவர், 99 Pence இங்கிலாந்து காசில்… அதாவது இந்திய மதிப்பில் 100 ரூபாய் மட்டுமே செலவழித்து ஒரு லம்போகினி காரை வாங்கியிருக்கிறார். எப்புட்றா?
விபத்துக்குள்ளான லம்போகினி

அதாவது, ஒரு வீக் எண்டில் சும்மா 100 ரூபாய்க்கு ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கியவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். ஆம், அவருக்குப் பரிசாக விழுந்தது 4 கோடி ரூபாய் லம்போகினி கார். அவர் லாட்டரியில் பரிசு வென்றதை அடுத்து, ஒரு லம்போகினி ‘ஹூராகேன்’ (Huracan) ஸ்போர்ட்ஸ் கார் அல்லது 1,00,000 யூரோ – இரண்டில் ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம் என அவருக்கு இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டன. பர்னட், தனது டிரீம் காரான லம்போகினியை இதில் தேர்ந்தெடுத்தார்.

கிராண்ட் பர்னட் இதை வெகுவிமர்சையாகக் கொண்டாடும் வகையில், ஷாம்பெயின் பாட்டிலைக் குலுக்கியபடி அந்த 2 சீட்டர் லம்போகினி ஸ்போர்ட்ஸ் காரைப் பிரமாண்டமாக டெலிவரி எடுக்கும் நிகழ்வைத் தனது சமூகவலைதளப் பக்கங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அவர் நினைத்ததுபோலவே இது மிகவும் வைரலாகப் பரவியது.

சில வாரங்கள் கழித்து, தனது பக்கங்களில் சோகமாக பர்னட்டின் பதிவு ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ‘என்னாச்சு’ என்று பார்த்தால்… புது லம்போகினி சில்லுச்சில்லாய் நொறுங்கியிருந்தது. ‘‘வாங்கி 2 மாசம்கூட முடியலை… இந்த விபத்து எப்படி?’’ என்று வலைதளங்களில் வைரலாய் கமென்ட்கள் வர… ‘நடந்தது இதுதான்’ என்று அவர் ஒரு பதிவிட்டிருந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கே வந்ததாகவும், அப்பொழுது எதிர்பாராதவிதமாக விபத்து நடந்துவிட்டதாகவும், தனது உடைந்த லம்போகினியுடன் வருத்தமாக நின்று கொண்டிருந்தார் பர்னட். 

ஆனால், வலைதளங்களில் பர்னட் சொன்னதை யாரும் நம்பவில்லை.

Grant Burnet with Lamborghini

‘லம்போகினியைக் கன்ட்ரோல் பண்ணத் தெரியாமல் ஆக்ஸிடென்ட் பண்ணிட்டு நடிக்கிறியா?’... 

‘‘ஆடத் தெரியாதவனுக்கு எதுக்கு சலங்கை? ஓட்டத் தெரியாதவனுக்கு எதுக்கு லம்போகினி?’’

‘‘அநியாயமாக மாடு மேல் பழி போடாதீர்கள்’’ 

‘‘அர்ப்பனுக்கு அர்த்த ராத்திரியில் வாழ்வு வந்தா இப்படித்தான்’’ 

– எனும் ரீதியில் பர்னட்டுக்கு எதிராக கமென்ட்கள் குவிய ஆரம்பித்திருக்கின்றன. 

‘‘நானே லம்போகினி போயிடுச்சேனு நொந்து போயிருக்கேன். சொன்னா நம்புங்கப்பா" எனும் ரீதியில், உண்மையிலேயே மாடு முட்டித்தான் தனது லம்போகினிக்கு இப்படி ஆகிவிட்டது என்பதை விளக்கப் போராடி வருகிறார் க்ராண்ட் பர்னட். 

4 கோடி ரூபாய் கார், வெறும் 100 ரூபாய்க்குக் கிடைப்பதெல்லாம் யாருக்கு பாஸ் அமையும்! அதேநேரத்தில், இப்படி ஒரு துரதிர்ஷ்டமும் யாருக்கும் அமையாது!


from Latest News https://ift.tt/QfMhrtk

Post a Comment

0 Comments