Doctor Vikatan: கர்ப்பப்பையோடு ஒட்டிய சினைப்பையால் வயிற்றுவலி; ஹார்மோன் மாத்திரைகள்தான் தீர்வா?

Doctor Vikatan: எனக்கு வலதுபக்க வயிற்றில் வலி இருக்கிறது. அதற்காக மருத்துவரை அணுகியபோது, என் இடதுபக்க சினைப்பையானது கர்ப்பப்பையுடன் ஒட்டிக் கொண்டுள்ளதாகச் சொல்லி, மூன்று மாதங்களுக்கு ஹார்மோன் மாத்திரைகள் எடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார். இதை எப்படிப் புரிந்துகொள்வது? விளக்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா

மகப்பேறியல் புற்றுநோய் மருத்துவர் டெல்பின் சுப்ரியா | சென்னை

சினைப்பையானது கர்ப்பப்பையோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மட்டுமே வலி வராது. சினைப்பையானது கர்ப்பப்பையோடு ஒட்டிக்கொண்டிருப்பதற்கான காரணங்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முன் ஏதேனும் அறுவை சிகிச்சை நடந்து அதன் விளைவாக இப்படி ஒட்டிக்கொண்டுள்ளதா அல்லது சாக்லேட் சிஸ்ட் எனப்படும் ரத்தக்கட்டி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். இந்த இரண்டு நிலைகளிலும் சினைப்பை கர்ப்பப்பையோடு ஒட்டியிருக்கலாம்.

ஒருவேளை எண்டோமெட்ரியாசிஸ் சிஸ்ட் காரணமாக இப்படி நிகழ்ந்து, அதன் விளைவாக வலி இருக்கலாம். அதனால்தான் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைத்திருப்பார். அந்த மாத்திரைகளுக்கு உங்கள் பிரச்னை சரியாகிறதா என்பதை வைத்து மேற்கொண்டு எப்படிப்பட்ட சிகிச்சைகளைக் கொடுப்பது என தீர்மானிப்பார்.

ஒருவேளை இந்த மாத்திரைகளில் உங்களுக்கு குணம் தெரியவில்லை என்றால் அடுத்தகட்டமாக ஊசி போடப்படும். நீங்கள் கர்ப்பம் தரிக்கிற திட்டத்தில் இல்லை என்கிற பட்சத்தில் கர்ப்பப்பைக்குள் ஒரு கருவியைப் பொருத்துவார்கள். அதையும் உங்கள் மருத்துவர் உங்களுக்குச் சொல்வார்.

கர்ப்பப்பை

இப்படி எந்தச் சிகிச்சையுமே பலன் தராதபட்சத்தில், கட்டி பெரிதாகிக் கொண்டே போனால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலமாக அந்தக் கட்டியை அகற்ற வேண்டியிருக்கும். அந்தக் கட்டியின் அளவு மற்றும் தன்மையைப் பொறுத்துதான் எதையும் முடிவு செய்ய முடியும். அப்படி எந்தக் காரணமும் இல்லாமல் அறுவை சிகிச்சையின் விளைவாகவும் கர்ப்பப்பையும் சினைப்பையும் சும்மா ஒட்டிக்கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வலி, சிலநாள்களுக்கு இருக்கும். போகப்போக சரியாகி விடும்.

ஒருவேளை அறுவை சிகிச்சையின் மூலம் அதைச் சரி செய்தாலும் மீண்டும் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே காரணம் அறிந்து சரியான சிகிச்சை கொடுக்கப்பட்டால்தான் இதற்கான நிரந்தர தீர்வைப் பெற முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/YZfmHAJ

Post a Comment

0 Comments