மக்களவைத் தேர்தல் 2024 - கூட்டணி குறித்து ப.சிதம்பரம் அடுக்கும் யோசனைகள் எடுபடுமா?!

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே இருக்கிறது. 2014-ல் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றது. 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்துவிட வேண்டும் என்பது பா.ஜ.க-வின் திட்டம்.

ராகுல் காந்தி

இன்னொரு புறம், இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, வரக்கூடிய தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், வெற்றிபெற வேண்டும் என்கிற தனது விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், பல சவால்களை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில், பா.ஜ.க எதிர்ப்பு நிலையில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியது கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் வலுவான கூட்டணியை காங்கிரஸ் கட்சி வைத்திருக்கிறது. ஆனால், இதுபோல எல்லா மாநிலங்களிலும் வலுவான கூட்டணி காங்கிரஸுக்கு இல்லை. இதுவே, பா.ஜ.க-வின் பலமாகவும், காங்கிரஸின் பலவீனமாகவும் இருக்கிறது. குறிப்பாக, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க எதிர்ப்பு நிலையில் இருக்கும் கட்சிகள் ஓரணியில் இல்லை.

ஸ்டாலின் - ராகுல் காந்தி

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து நிற்கிறது. அங்கு, வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஜனதா கட்சி, காங்கிரஸுடன் கைகோக்கத் தயாராக இல்லை. உத்தரப்பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டபோது, அதில் கலந்துகொள்ளுமாறு அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

ஆனால், பெயருக்காக வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்களே ஒழிய, அகிலேஷ் யாதவ் உட்பட எந்தக் கட்சியின் தலைவர்களும் நேரில் சென்று யாத்திரையை வாழ்த்தவில்லை. உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கு சரிந்திருக்கிறது. ஆனாலும், அந்த கட்சி பா.ஜ.க-வை முழுமையாக எதிர்க்கவில்லை.

அகிலேஷ் யாதவ்

டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆட்சியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.க-வை எதிர்க்கிறது. அதே நேரத்தில், காங்கிரஸையும் ஆம் ஆத்மி எதிர்க்கிறது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ்., பா.ஜ.க-வை கடுமையாக எதிர்க்கிறது. அதே நேரத்தில், காங்கிரஸையும் அந்தக் கட்சி எதிர்க்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இல்லை. அதே நேரத்தில், காங்கிரஸுடன் கூட்டணி வைக்கவும் அவர்கள் தயாராக இல்லை. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்க்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் கைகோக்கத் தயாரில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், காங்கிரஸும் பிற கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும் என்கிற வேண்டுகோளை விடுத்திருக்கிறார் ப.சிதம்பரம். டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் நேர்காணல் அளித்திருக்கிறார். அதில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அதிகம் எதிர்பார்க்கிறோம். பா.ஜ.க-வை எதிர்க்க ஒன்றுபட்ட முன்னணியை எதிர்க்கட்சிகள் உருவாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் இருக்கிறது. அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பலத்தை கூட்டணிக்கு கொண்டுவருகிறார்கள்.

மம்தா பானர்ஜி

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு காங்கிரஸ் கட்சியே மையமாக இருக்க வேண்டும். இதற்காக, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் பணிவுடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் அணுக வேண்டும்’ என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். ப.சிதம்பரம் உட்பட இத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்களின் கருத்தும் எதிர்பார்ப்பும் சரியானதாக இருக்கலாம். ஆனால், பா.ஜ.க-வுக்கு எதிராக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரளுவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனாலும், மனப்பான்மையுடனும் பணிவுடனும் அணுக வேண்டும் என்கிற வேண்டுகோளை பிற எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்தே ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று!



from Tamilnadu News https://ift.tt/hkdIBwT

Post a Comment

0 Comments