ராமநாதபுரம்: படகிலிருந்து தவறி விழுந்து 2 பெண்கள் பலி; காப்பாற்ற முயன்ற வாலிபரும் பலியான சோகம்

மதுரை தெப்பக்குளம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த 11 பேர் குடும்பத்தினருடன் மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் தேவிப்பட்டினத்தில் படையாச்சி காலனியில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலான உலகநாயகி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தனர். கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அருகே உள்ள தேவிபட்டினம் கடற்கரைக்கு சென்றனர். தேவிபட்டினம் படையாச்சி காலனியை சேர்ந்த பேச்சு குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியான சுந்தர் (28) என்பவர், தனக்கு சொந்தமான என்ஜின் பொருத்திய பைபர் படகில் 11 பேரையும் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் அழைத்து சென்றிருக்கிறார்.

கடலுக்குள் சற்று தொலைவில் சென்றபோது, காற்றின் வேகத்தில், படகு ராட்சச அலைகளில் சிக்கி ஊசல் போல ஆடி உள்ளது. இதில் படகின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த மணிமேகலை (54), இருளாயி(56) ஆகிய 2 பேரும் தடுமாறி கடலுக்குள் தவறி விழுந்தனர். உடனே அவர்களை காப்பாற்ற படகில் இருந்த உறவினரான என்ஜினீயர் முத்துமணி(33) என்பவர், கடலில் குதித்தார். அவரும் கடலில் மூழ்கினார்.

பலியான முத்துமணி

இதையடுத்து சுந்தர், அந்த பைபர் படகை கரையை நோக்கி ஓட்டி வந்து மீனவர்களை அழைத்து சென்று கடலில் குதித்து, 3 பேரையும் தேடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், தேவிப்பட்டினம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களும் கடலில் இறங்கி தேடினர்.

ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை மணிமேகலை, இருளாளி ஆகிய 2 பேரின் உடல்கள் கரையோரத்தில் ஒதுங்கின. வாலிபர் முத்துமணியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

தகவல் அறிந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, துணை சூப்பிரண்டு ராஜா, தேவிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பலத்த காற்று வீசியதால் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

மீட்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குபதிவு செய்து, சுந்தரை கைது செய்தனர்.

இந்நிலையில் கடலில் மாயமான முத்துமணியை தேடும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அவரும் இறந்த நிலையில் உடல் கரை ஒதுங்கி இருப்பது மேலும் சோகத்தை அதிகப்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/c2or9CK

Post a Comment

0 Comments