திருவாரூர்: கமலாலயம் குளம், நாகநாத சுவாமி கோயில் விசிட் - பழைய நினைவுகளில் மூழ்கிய முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான கமாலயம் குளத்தின் நடுவில் இருக்கும் நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்றதுடன், அரை மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே இருந்து பழையை நினைவுகள் குறித்து நினைவு கூர்ந்தார்,

குளத்தின் படித்துரையில் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார். சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கிய ஸ்டாலின், அங்கிருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து காட்டூரில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னர் கருணாநிதி நினைவாக கட்டப்பட்டு வரும் மணிமண்டப பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து சமீபத்தில் அவர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருவாரூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

நெல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த ஸ்டாலின்

இதனைதொடர்ந்து திருவாரூர் மேற்கு வீதியில் அமைந்துள்ள கமலாலயம் குளத்துக்கு சென்றார். பின்னர் குளத்துக்கு நடுவில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயிலுக்கு படகில் சென்றதுடன் அரைமணி நேரத்திற்கு மேலாக கோயிலில் இருந்தார். டி.ஆர்.பாலூ, திருவாரூர் எம்.எல்.ஏ கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்ட பலர் அப்போது உடனிருந்தனர்.

இது குறித்து முதல்வருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ``எத்தனையோ முறை திருவாரூர் வந்துள்ள ஸ்டாலின் இது வரை கமலாலயம் குளத்துக்குள் சென்றதே இல்லை. இந்த முறை கமலாலயம் குளத்திற்கு சென்றவர் படகு மூலம் குளத்தை சுற்றி பார்த்தார். பின்னர் குளத்திற்குள் நடுவில் இருக்கும் நாகநாத கோயிலுக்குள் சென்றதாக தெரிகிறது. அதன் படித்துறையில் நீண்ட நேரம் அமர்ந்தவாறு பழைய நினைவுகளை அசைப்போட்டுள்ளார்.

கமலாலயம் குளத்தில் ஸ்டாலின்

படியில் அமர்ந்தவாறே டீ சாப்பிட்டார். ``கமலாலயம் கடல் போல் காட்சியளிக்கும் ஆனாலும் அது குளம் தான். அதன் நடுவண் கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர் நீச்சலை கலைஞர் நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார்” என அருகில் இருந்தவர்களிடம் சொன்னதுடன் அதனை தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

கமலாலயம் குளத்துக்குள் இருக்கும் நாகநாத சுவாமி கோயிலில் கிட்டதட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ஸ்டாலின் இருந்துள்ளார். ஸ்டாலின் வருகைக்காகவே அக்கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனால் ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவே தெரிகிறது.

படகில் செல்லும் ஸ்டாலின்

இந்த திடீர் விசிட் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ``கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.

இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்!” என பதிவிட்டுள்ளார்.



from Tamilnadu News https://ift.tt/hdPKMmQ

Post a Comment

0 Comments