ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க சார்பில் தென்னரசும் போட்டியிடுகிறார்கள்.
முன்னதாக, 2022-ம் ஆண்டு, ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, இடைத்தேர்தலுக்காக எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ``இடைத்தேர்தலில் வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன்படி, பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்று, எடப்பாடி தரப்பின் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்பதால், பன்னீர் தரப்பில் நிறுத்தப்பட்ட செந்தில் முருகனை வாபஸ் பெற போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இரட்டை இலைக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய போவதாகவும் அறிவித்தார் பன்னீர்.
அதற்காக பன்னீர் தரப்பு வழங்கிய நட்சத்திர பேச்சாளர் பட்டியலை, சட்டவிதிகளின்படி ஏற்க முடியாது என கருதி தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால், பன்னீரின் பயணம் முடங்கியது. அவரின் ஆதரவாளர்களும் முடங்கினர். இந்த நிலையில்தான், தனது தரப்பில் நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வரும் 20-ம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறார் பன்னீர்.
இது குறித்து அவரது அணியின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்." இடைத்தேர்தலுக்காக எங்கள் தரப்பு சார்பாக நிறுத்தப்பட்ட செந்தில் முருகன் ஏற்கேனவே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எடப்பாடி தரப்புக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு கடிதம் கொடுத்தது, எங்களுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து வந்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஈரோடு இடைத்தேர்தலிலிருந்து பின்வாங்குவதென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கள் தரப்பில் நிலவிய குழப்பத்தால் வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை.
இதனால், முன்மொழியகூட ஆள் இல்லாமல் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்துதான், இரட்டை இலைக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தொம். ஆனால், இதை எப்படியோ மோப்பம் பிடித்த எடப்பாடி தரப்பு, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்து முட்டுக்கட்டை போட்டது. இதனால், எங்கள் தரப்பும் மிகவும் சோர்வாகிவிட்டது. இதன் காரணமாக, கடந்த 13-ம் தேதி ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், ஈரோடு இடைத்தேர்தலில் நமது பங்களிப்பு எதுவுமே இல்லையென்றால் அரசியல் வெளிச்சத்திலிருந்து நாம் மறைந்துவிடுவோம், என்று பேசப்பட்டது.
அதற்காக, எடப்பாடி தரப்பு தடை ஏற்படுத்தினாலும், இரட்டை இலைக்காக வாக்குச் சேகரிக்கலாம் என்று ஓ.பி.எஸ் தெரிவித்தார். ஆனால், சீனியர்களுக்கு அதில் உடன்பாடில்லை. அதேபோல, எங்கள் தரப்பு ஆதரவு அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொதுக்கூட்டம் போடலாம் என்று பேசப்பட்டது. ஆனால், `இது குறித்து நாமே முடிவு எடுக்க வேண்டாம்.
நமது தரப்பிலிருக்கும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம்' என்று முடிவானது. அதேபோல, சின்னம்மாவைச் சந்தித்து ஆலோசனை செய்யலாமா என்றும் பேசப்பட்டது. அதன்படி, தேர்தலில் பிரசாரத்துக்குப் போகலாமா வேண்டாமா, அடுத்தக் கட்டப் பணிகள் என்ன என்பது குறித்து முடிவெடுக்க அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்றனர் விரிவாக.
from Tamilnadu News https://ift.tt/0Kckibd
0 Comments