பாரத் ஜோடோ யாத்திரை முடிந்த பிறகு முதல் முதலாக கேரள மாநிலத்தில் உள்ள தன்னுடைய தொகுதியான வயநாட்டுக்கு ராகுல் காந்தி சென்றிருந்தார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தன்னுடைய எம்.பி நிதியில் சுமார் ரூ.35 லட்சம் ரூபாய் செலவில் வண்டூர் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய டயாலிசிஸ் கருவியை மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அனுப்பியிருக்கிறது.
தன்னுடைய எம்.பி நிதியில் கேரள மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேசன் சார்பில் டயாலிசிஸ் யூனிட் ஒன்றை மலப்புரம் வண்டூர் தாலுகா மருத்துவமனைக்கு ராகுல் காந்தி அனுப்பி வைத்தார். கண்டெய்னர் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட டயாலிசிஸ் கருவியை வைக்க மருத்துவமனையில் இடமில்லை எனக்கூறி அவற்றை மெடிக்கல் ஆபீசர் திருப்பி அனுப்பினார்.
மலைச் சார்ந்த பகுதியான வண்டூரில் டயாலிசிஸ் கருவி வேண்டும் என நீண்ட நாள்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மருத்துவமனை வளாகத்தில் எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தில் டயாலிசிஸ் கருவியை வைக்கும்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் என்.ஏ.முபாரக் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், டயாலிசிஸ் கருவியை இயக்க ஒரு பணியாளரை நியமிக்கவும் ஊராட்சி ஒன்றியம் முயன்றுகொண்டிருக்கும் நிலையில், மருத்துவமனை மெடிக்கல் ஆபீசர் டயாலிசிஸ் கருவியை திருப்பி அனுப்பிய சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து வண்டூர் தாலுகா மருத்துவமனை மெடிக்கல் ஆபீசர் டாக்டர் ஷீஜா "கருவியை வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தும் பணி முழுமை அடையவில்லை. எனவே ஒவ்வொரு பாகமாக கருவியை கொண்டுவந்து பொருத்தலாம் என்பதற்காகத்தான் அதை திருப்பி அனுப்பினேன்" என்றார்.
ராகுல்காந்தி அனுப்பிய டயாலிசிஸ் கருவியை திருப்பி அனுப்பிய மெடிக்கல் ஆபீசரை மாற்றவேண்டும் என மருத்துவமனையை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
from Tamilnadu News https://ift.tt/K3vg96w
0 Comments