அ.ம.மு.க நீலகிரி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வனின் தந்தை இறங்கல் நிகழ்வுக்காக, குன்னூர் அருகிலுள்ள கரன்சி கிராமத்துக்கு நேற்று வருகை தந்த டி.டி.வி.தினகரன், கலைச்செல்வனைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், "தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்த தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. நிதிப்பற்றாக்குறையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் தடுமாறி வருகிறார்கள். இத்தகைய சூழலில் வரிப்பணத்திலிருந்து இத்தனை கோடியில் நினைவுச்சின்னம் அமைப்பதுதான், சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும் கடலுக்குள் வைக்க இருப்பதாகச் சொல்வதால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கருணாநிதி நினைவிடம் அல்லது தி.மு.க-வுக்குச் சொந்தமான இடத்தில் தி.மு.க நிதியில் பேனா நினைவுச்சின்னம் அமைத்துக் கொள்ளட்டும். முதல்வர் ஸ்டாலின் இதைச் செய்தால்தான் அவருக்கும் நல்லது, தமிழ்நாட்டுக்கும் நல்லது. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வரும் தீயசக்தி தி.மு.க-வுக்கு எதிராகவும் அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றி வரும் துரோக சக்தி பழனிசாமி கம்பெனிக்கும் எதிராகவும் மக்களின் எதிர்ப்புகளைப் பதிவுசெய்யத்தான் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு குக்கர் சின்னத்தை வழங்க மறுத்ததால் நாங்கள் போட்டியிடவில்லை. வேறு ஒரு வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், யாருக்கும் எங்களுடைய ஆதரவு கிடையாது என பலமுறை திட்டவட்டமாகச் சொல்லிவிட்டேன்" என்றார்.
from Latest News https://ift.tt/MFlIR4O
0 Comments