இந்தியக் குடியுரிமையைத் துறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? - ஓர் அலசல்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியக் குடியுரிமையை கைவிட்டவர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு மட்டும் 2,25,620 இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கடந்த 11 ஆண்டுகளில் 2022-ம் ஆண்டு பதிவாகியிருக்கும் எண்ணிக்கையே மிகவும் அதிகமானது எனத் தெரிவித்திருக்கும் அவர், 2011-ம் ஆண்டு முதல் 2022 வரை 16,00,000-க்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்ததாகக் கூறினார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட விவரத்தின்படி, 2015-ம் ஆண்டு 1,31,489 பேரும், 2016-ம் ஆண்டு 1,41,603 பேரும், 2017-ம் ஆண்டு 1,33,049 பேரும், 2018-ம் ஆண்டு 1,34,561 பேரும், 2019-ம் ஆண்டு 1,44,017 பேரும், இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது, 2020-ம் ஆண்டில் கணிசமாக குறைந்திருக்கிறது. 2020-ல் 85,256 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கிறார்கள். அந்த ஆண்டில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பும், அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரங்கும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. 2021-ல் 1,63,370 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு (2022) அதிகபட்சமாக 2,25,620 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்திருக்கின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியுரிமைப் பெற்றிருக்கின்றனர். இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்கள், உலகில் 135 நாடுகளில் குடியுரிமையைப் பெற்றிருக்கின்றனர். இதில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, நியூசிலாந்து ஆகிய நாடுகளில், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியர்கள் அதிக அளவில் குடியுரிமையைப் பெற்றிருப்பதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், நரேன் தாஸ் குப்தாவின் தனி கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துபூர்வமாக அளித்திருக்கும் பதிலில், ``இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்களில் சிலருக்கு H-1B, L-1V விசாக்கள் இருக்கின்றன. ஐ.டி வேலைகளை இழந்து தவிக்கும் மக்களின் பிரச்னையை, மத்திய அரசு பலமுறை அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

மத்திய அரசு

உலகம் முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான தனது ஈடுபாட்டில் அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் வெற்றிகரமான, செல்வாக்கு நிறைந்த, செல்வ வளம் மிக்கவர்களாக வலம் வரும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் நாட்டின் சொத்து. அவர்களுடைய செழிப்பும், சக்தியும், இந்தியாவின் உற்பத்திக்கு உதவுகிறது'' எனக் கூறியிருந்தார்.

இது குறித்து பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பனிடம் பேசினோம். ``ஒப்பீட்டளவில் பார்த்தால் இந்தியர்களைவிட சீனர்களே அதிக அளவில் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இந்தியாவிலிருந்து படிப்பதற்காக செல்பவர்கள் வெளிநாடுகளில் வேலை கிடைப்பதால் அங்கேயே தங்கி விடுகின்றனர். இது தவிர முதல் தலைமுறையாக வெளிநாடுகளில் செட்டிலானவர்களின் குழந்தைகளும், பெரும்பாலும் இந்தியா வர விரும்புவதில்லை. இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை கிடையாது. அதனால் வெளிநாடுகளின் குடியுரிமையைப் பெற விரும்புபவர்கள், இந்தியக் குடியுரிமையைத் துறக்க வேண்டியிருக்கிறது. சமூக பாதுகாப்பு, பொருளாதார சுதந்திரம், வேலை வாய்ப்பு உள்ளிட்டவை இதன் பின்னணியில் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கனடா போன்ற நாடுகளெல்லாம் இந்தியர்களை `வாருங்கள்... வாருங்கள்' என அழைக்கின்றன. காற்று மாசு, மேம்படுத்தப்படாத வசதிகள் உள்ளிட்டவற்றை விட்டுச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது, மக்கள் அதை தேர்ந்தெடுக்கின்றனர்.

சோம வள்ளியப்பன்

இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இது பெரிய எண்ணிக்கை இல்லை. 2011-ம் ஆண்டிலிருந்து கணக்கிடுவதால் பெரிய எண்ணிக்கையாகத் தெரிகிறது. கொரோனா காலத்தில் பல உலக நாடுகள் தடைவிதித்திருந்ததால், 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கொரோனா காலத்தில் விண்ணப்பித்தவர்களையும் சேர்த்துதான் 2022-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்த தொகை சுமார் நூறு பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. பொருளாதாரரீதியாகப் பார்த்தால் இதனால் அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை'' என்றார். 



from Tamilnadu News https://ift.tt/LTjNdXw

Post a Comment

0 Comments