``கன்னியாகுமரி புவன நந்தீஸ்வரர் கோயிலைக் காணவில்லை!" - பொன் மாணிக்கவேல் அதிர்ச்சித் தகவல்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாக்களில் கலந்துகொண்டார். சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலுக்கு வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய பொன் மாணிக்கவேல், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு கோயில்கள் குறித்து கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் கன்னியாகுமரியில் புவன நந்தீஸ்வரர் சிவன் கோயிலை காணவில்லை. இந்தக் கோயில் களவாடப்பட்டு இந்தக் கோயிலின் கருவறையிலிருந்த மூலவமூர்த்தியான லிங்கமும் அதற்கு கீழ் இருந்த ஏராளமான சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், பொக்கிஷங்கள், உற்சவ உலோகத் திருமேனிகள், விலைமதிக்க முடியாத தொன்மையான தங்கம், வெள்ளி, அதிக அவில் வைர நகைகள் கையாடல் செய்யப்பட்டு களவாடப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலின் உண்மையான பெயர் ராஜராஜேஸ்வரம் ஆகும். 126 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கல்வெட்டு மற்றும் தொல்லியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்டு 1896-ம் ஆண்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

சுசிந்திரம் கோயிலில் பொன் மாணிக்கவேல்

கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆவணங்களின்படி கன்னியாகுமரிக்கு 971 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொன்மையான பெயர் கங்கைகொண்ட சோழபுரம் என்று அறியப்படுகிறது. நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியிலுள்ள சோழராஜா சிவன் கோயிலில் சோமஸ்கந்தர் தெய்வ செப்பு திருமேனி சிலை, தனி அம்மன் சிலைகள் திருடப்பட்டிருக்கின்றன. இது குறித்து காவல் நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் அர்த்தமண்டபத்தில் வடக்கு புறத்தில் உள்ள துர்க்கை அம்மன் விக்கிரகமும் களவாடப்பட்டிருக்கிறது. இன்றைய அரசும் கடந்த அரசை போல மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்களிலிருந்து மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள தெய்வ செப்பு திருமேனிகள் பாதுகாப்பின்றி களவுபோகும் அபாயத்தில் இருந்து வருகின்றன.

கோயில்களில் மூலவர்களின் தொன்மையான கல்வெட்டுகள், தமிழ் பெயர்களின்படி கால பூஜைகளோ, தினசரி வழிபாட்டு நிகழ்வுகளோ நடைபெறவில்லை. இதற்கு முழு காரணம் உண்மையான தாய்மொழி மற்றும் இறை நம்பிக்கையற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்தான். கோயில்களில் மேலாளர் அறைகளின் அருகில் கழிப்பிடங்களைக் கட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. கல்வெட்டுகளை மறைப்பது, வர்ணம் பூசுவது, மரப்பலகைகளில் தமிழக அரசின் சுயபுராணம் பாடுவது போன்றவற்றை கோயில்களிலிருந்து அகற்ற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு செய்ததில் ஆறு கோயில்கள் கவனத்தில் கொண்டுவரப்பட்டன. இதில் கன்னியாகுமரி பூவனநந்தீஸ்வரர் சிவன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலிலுள்ள கைலாசநாதர் கோயில், கன்னியாகுமரி குகநாத சுவாமி கோயில், தரிசனம் தோப்பு கோயில், சோழராஜா சிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஐம்பொன் தெய்வத் திருமேனிகள் பாதுகாப்பு அறைகள் கட்டும் பொறுப்பினை ஒருபோதும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கக் கூடாது. இந்தப் பொறுப்பினை தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

பொன் மாணிக்கவேல்

தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான திருக்கோயில்களில் ஒரு கோயிலில்கூட தெய்வத்திருமேனி காப்பு அறைகள் கட்டப்படவில்லை. கோயில்களிலுள்ள புராதன பொக்கிஷங்கள் அடங்கிய கல்வெட்டுகள் மற்றும் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும். கோயில்களில் அர்ச்சகர் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இவர்களது தினசரி வருமானம் 100 ரூபாய் மட்டுமே. வெளி உலகில் அனைத்து வேலைகளுக்கும் வருமானம் உயர்ந்திருக்கும் நிலையில் அர்ச்சகர்களுக்கு மட்டும் வருமானம் அதே நிலையில் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்" என்றார்.



from Tamilnadu News https://ift.tt/FrC6Xhn

Post a Comment

0 Comments