தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே, நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். குறிப்பாக பள்ளிக் கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிகளவில் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கஞ்சா கடத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த வகையில் தான், அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் போலீஸார் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது, சிவப்பு கார் ஒன்றில் கஞ்சா கடத்தி கொண்டுவரப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த சிவப்பு நிறக் காரை மடக்கிப் பிடித்து போலீஸார் சோதனையில் uஈடுபட்டனர். அப்போது, அந்த காரில் 1 கிலோ 700 கிராம் அளவுக்கு கஞ்சா பொட்டலங்களைப் போலீஸார் கண்டெடுத்தனர்.
தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காரில் கஞ்சா கடத்தி வந்தது, கோவிலூர் கிராமத்தில் வி.ஏ.ஓ-வாக பணியாற்றும் ஜெயரவி வர்மா என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. ஜெயரவி வர்மா, அவருக்கு துணையாக இருந்த கணேசன், சூர்யா ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஜெயரவி வர்மா, ஏற்கெனவே மணல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு துணையாக இருந்ததால், பணியிடமாறுதல் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது. அரசு அதிகாரியே கஞ்சா கடத்திய சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest News https://ift.tt/QAvfgBK
0 Comments