திசையன்விளை: மகனுக்கு சரியாக முடிவெட்டாத சலூன் கடைக்கு பூட்டு போட்ட காவலர் - வைரலான வீடியோ!

நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர், நேவிஸ் பிரிட்டோ. அவர் அசிங்கமாகப் பேசியபடி அங்குள்ள சலூன் கடைக்குப் பூட்டு போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து விசாரித்தபோது அவரது 6 வயது மகனுக்கு முடிவெட்டியது சரியில்லாததால் அந்தக் கடைக்குப் பூட்டுப் போட்ட விவரம் தெரியவந்தது.

சலூன் முன்பாக மகனுடன் காவலரின் மனைவி

திசையன்விளை கடைக்காரர்கள் மத்தியில் இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காவலர் நேவிஸ் பிரிட்டோ தனது ஆறு வயது மகனிடம் பணம் கொடுத்து, அருகில் உள்ள சலூன் கடைக்குச் சென்று முடிவெட்டி வருமாறு தெரிவித்துவிட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார். அதன்படி அங்குள்ள சலூனில் முடிவெட்டிய பின்னர் வீட்டுக்கு வந்த சிறுவன், குளித்துவிட்டு வந்திருக்கிறான். அவரின், தலையைப் பார்த்து சிறுவனின் தயார் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், அவனது தலைமுடி சரியாக வெட்டப்படாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நேவிஸ் பிரிட்டோவின் மனைவி, திசையன்விளை ராமகிருஷ்ணா பள்ளி எதிரே உள்ள யுவ சிவராமன் என்பவரின் சலூன் கடைக்குச் சென்று ஆத்திரத்துடன் பேசியுள்ளார். கடையின் உரிமையாளர் அங்கு இல்லாததால் கடையின் ஊழியர்கள் அவரிடம், தங்கள் கடைக்கு அந்தச் சிறுவன் வரவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். அதை ஏற்காமல் காவலரின் மனைவி அங்கிருந்தவர்களை வசைபாடியுள்ளார்.

பின்னர் அந்தக் கடைக்கு வந்த காவலர் நேவிஸ் பிரிட்டோ, அங்கிருந்தபடியே கடையின் உரிமையாளரான யுவ சிவராமனிடம் தொலைபேசியில் ஆத்திரத்துடன் அருவருக்கத் தக்க வகையில் பேசியுள்ளார். பின்னர், கையுடன் எடுத்து வந்திருந்த பூட்டைக் கொண்டு அந்தக் கடையின் ஷட்டரை இழுத்து மூடி பூட்டிவிட்டுச் சென்று விட்டார்.

சலூன் உரிமையாளரான யுவ சிவராமன் நேரில் வந்து பார்த்தபோது கடைக்கு புதிய பூட்டு போடப்பட்டிருந்தது. அதனால் காவல் நிலையத்துக்குச் சென்று நேவிஸ் பிரிட்டோவிடம் தனது கடையில் அவரின் மகன் முடிவெட்டவில்லை என்றும் தேவையென்றால் சிசிடிவி காட்சிகளைப் பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து அவதூறாகப் பேசியுள்ளார். அதனால் காவலர் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவலர் நேவிஸ் பிரிட்டோ

இதனிடையே, காவலர் நேவிஸ் பிரிடோவும் அவரது மனைவியும் சலூன் முன்பாக நின்று கொண்டு அவதூறாகப் பேசிய விவரங்கள் மற்றும் தொலைபேசியில் சலூன் உரிமையாளர் யுவ சிவராமனிடம் பேசியது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அருகில் உள்ள கடைக்காரர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்த தகவல் அறிந்த நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணன் உடனடியாக டி.எஸ்.பி-யிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில், காவலர் நேவிஸ் பிரிட்டோ அத்துமீறிய செயலில் ஈடுபட்டது தெரியவந்ததால் உடனடியாக அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.



from Latest News https://ift.tt/xCdTXzo

Post a Comment

0 Comments