பன்னீருக்கு `ஷாக் மேல ஷாக்’ - எடப்பாடி பக்கம் தாவிய மாவட்டச் செயலாளர்; குழம்பும் நிர்வாகிகள்!

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக அரசியல் முடக்கத்துக்கு பின்னர், கடந்த 20-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நடத்தியிருந்தார் பன்னீர்செல்வம். அந்த கூட்டத்தில், இது இரண்டாவது தர்மயுத்தம் என அறிவித்த பன்னீர், வரும் மார்ச் மாதம் மிகப்பெரிய அளவில் முப்பெரும் விழா நடத்த போவதாகவும் அறிவித்திருந்தார்.

எடப்பாடி பக்கம் தாவிய ஓபிஎஸ் அணியினர்

இந்நிலையில், பன்னீர் அணியின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு தாவியிருப்பது, ஒட்டுமொத்த பன்னீர் தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இதன் பின்னணி என்ன என்பது குறித்து பன்னீர் அணியின் மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.

``கடந்த 20-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எங்களுக்கு யாருக்குமே பெரிய அளவில் பிடிப்பு ஏற்படவில்லை. ஏதோ கடமைக்கு கூட்டம் நடத்தியது போலதான் இருந்தது. குறிப்பாக, அன்று வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜெ.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தலைமையில் மாவட்ட வாரியாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது களத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பது குறித்து நாங்கள் எடுத்து சொன்னதை, அவர்கள் யாருமே கேட்க தயாராக இல்லை.

பன்னீர்செல்வம்

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கத்திடம், ' நான் உங்க கூட இருக்குனுமா வேண்டாமா... நீங்களே சொல்லுங்க. பெங்களூரூ புகழேந்தி என் மாவட்டத்தில் எனது நிர்வாகிகளை சந்தித்து பேசி, பிரச்னை செய்கிறார். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இதை பலமுறை உங்களிடம் சொல்லிவிட்டேன். நீங்க அவரை கண்டிக்கிற மாதிரி தெரியவில்லை. நான் அடுத்த முறை இப்படி பேசிக் கொண்டு இருக்க மாட்டேன். கிளம்பி போய்டே இருப்பேன்' என காட்டமாக கூறிவிட்டு, வேகமாக வெளியேறிவிட்டார்.

ஆனால், பெங்களூரு புகழேந்தி மீது இதுவரை நடவடிக்கை எடுத்தது போல தெரியவில்லை. அதேபோல, ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம், எடப்பாடி அணியில் இருக்கும் மா.செ.க்களுடன் நேரடியாக போட்டி போட்டுக் கொண்டு, எங்கள் தரப்புக்கு அதிகப்படியான நபர்களை சேர்த்தார். கிழக்கு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். அவருக்கு கொடுக்கவில்லை என்பதை தாண்டி, அவரிடமே கலந்து ஆலோசிக்காமல், செந்தில் முருகனை வேட்பாளராக நிறுத்திவிட்டனர்.

இதுகுறித்து கு.ப.கிருஷ்ணனிடம் கேட்டபோது, அவரும் முறையாக பதிலளிக்கவில்லை என்று சொல்கிறார்கள். இதனால், அதிருப்தியில் இருந்த முருகானந்ததை, எடப்பாடி அணியினர் அணுகி, தங்கள் பக்கம் இழுத்து இருக்கிறார்கள். ஆனால், அவருக்கு எந்த பதவியையும் அவர்கள் கொடுக்க போவதில்லை. திமுகவில் இருந்து வந்த மதுரை டாக்டர் சரவணன் போலவே சும்மாவே வைத்திருப்பார்கள். அதேபோல, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி தரப்பினர் பேசி வருகிறார்கள்" என்றனர் விரிவாக...



from Tamilnadu News https://ift.tt/KqvBcfm

Post a Comment

0 Comments