Doctor Vikatan: என் வயது 59. எத்தனை நாள்களுக்கு ஒரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்? அசைவத்தில் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும்... எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்?
Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
வயதைக் குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்கள் உயரம் மற்றும் எடையைக் குறிப்பிடவில்லை. ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு வயிற்றுப் பகுதியைச் சுற்றி (அப்டாமினல் ஒபிசிட்டி) கொழுப்பு அதிகமிருந்தால், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்னை வரும். அதாவது இன்சுலின் சுரக்க, சுரக்க உங்கள் உடல் அதை எடுத்துக் கொள்ளாது.
ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில டெஸ்ட்டுகள் மூலம் உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும். எத்தனை நாட்களுக்கொரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் முடிவு செய்யப்பட வேண்டும். நடக்கும்போது மூச்சு வாங்குகிறதா, கொழுப்பு அதிகமிருக்கிறதா, ரத்த அழுத்தம் அதிகமிருக்கிறதா, உடல் பருமன் இருக்கிறதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.
அசைவத்தில் கடல் உணவுகள் சாப்பிடலாம். கடல் உணவுகளிலும் முக்கியமாக மீன் சாப்பிடுவது நல்லது. மீன்களில் நல்ல கொழுப்பும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் இருப்பதால் அது ஆரோக்கியத்துக்கு நல்லது. அதை வாரம் இருமுறை சாப்பிடலாம். மீன்களையும் பொரித்தோ, எண்ணெய்விட்டு வறுத்தோ சாப்பிடாமல் கிரில் செய்து சாப்பிடலாம்.
மட்டன் சாப்பிடுவது என்பது உங்கள் உடலின் கொழுப்புச்சத்தின் அளவை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும். உங்கள் உடலில் ஏற்கெனவே கொழுப்பு அதிகமிருந்தால், மட்டன் சாப்பிடுவதன் மூலம் அது இன்னும் அதிகரிக்கும். கொழுப்பு அதிகரித்தால் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் போன்றவற்றுக்கான ரிஸ்க் அதிகரிக்கும்.
பிரியாணிக்கும் இதே விதி பொருந்தும். சரியான எடையைத் தக்கவைத்திருக்கிறீர்கள் என்றால் வாரம் இருமுறை சாப்பிடலாம். அப்படி இல்லாதபட்சத்தில் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. உங்களுடைய உடல் ஆரோக்கியம், எடை, செரிமான சக்தி, குடும்பப் பின்னணியில் இதயநோய் பாதிப்பு இருப்பது, கொழுப்பு அளவு என பல விஷயங்களை வைத்தே எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம் என்று முடிவு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/pH0xE8P
0 Comments