Doctor Vikatan: ஜலதோஷம் இருக்கும்போது எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாமா? வைட்டமின் சி உள்ள பழங்கள் ஜலதோஷத்தைத் தடுக்குமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
சளி, இருமல், காய்ச்சல் வரும்போது சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவதோ, அவற்றின் ஜூஸை குடிப்பதோ கூடாது என்றொரு நம்பிக்கை நம் மக்கள் பலரிடமும் இருக்கிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை சுத்தமான தண்ணீர் சேர்த்து ஜூஸாக்கி குடிக்கும்போது எந்தப் பிரச்னையும் வராது.
இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற சிட்ரிக் பழங்கள் நம் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தக்கூடியவை. எனவே இவற்றை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம், ஜூஸாக்கியும் குடிக்கலாம். சளி, இருமல் பாதித்தவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதோடு வெதுவெதுப்பான நீரை நிறைய குடிக்கலாம்.
சிட்ரஸ் பழங்கள் என்றாலே பலருக்கும் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி மட்டும்தான் தெரியும். இவை தவிர ப்ளூபெர்ரி, கிவி, அன்னாசி, பப்பாளி, கொய்யா போன்றவையும் சிட்ரிக் பழங்கள்தான். எனவே சளி, இருமல் இருக்கும்போது இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சளி, இருமல் பாதித்த பிறகுதான் இது போன்ற வைட்டமின் சி சத்துள்ள பழங்களையோ, உணவுகளையோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. தினமுமே அன்றாட உணவில் இந்தப் பழங்களில் ஒன்றை சாப்பிட்டு வருவது நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும்.
ஒருவேளை வைட்டமின் சி குறைபாடு உள்ளது உறுதியானால், மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் சி சப்ளிமென்ட்டுகளை, அவர் பரிந்துரைக்கும் காலத்துக்கு, அவர் குறிப்பிடும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/dy8OSTs
0 Comments