சேலம், ஏற்காடு என்பது தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மலையில் 70 குக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும்பாலானோர் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்துவருகின்றனர். பொருளாதாரத்தில் விளிம்பு நிலையிலிருக்கும் மலைவாழ் மக்களுக்கு இன்றளவும் சரியான அடிப்படை வசதிகள் கிடைப்பது என்பது பெரும் போராட்டமாகத்தான் இருந்துவருகிறது.
குழந்தைகளுக்குச் சரியான வீடு வசதிகள் இல்லாமல், படிப்பதற்கு பள்ளிக்கூடம் இல்லாமலும் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில், ஏற்காடு அடுத்த புளியங்கடை எனும் கிராமத்தில் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றை மறுசீரமைப்பு செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பள்ளிக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், புளியங்கடை பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்று வெளியிட்டனர். அதில், `` நீங்க புது கட்டடம் கட்டித் தருவீங்கன்னுதான் நாங்க, கட்டடம் கட்டுறவரைக்கும், மழையிலும், வெயிலிலும் உட்காந்து படிக்கிறோம். ஆனா அந்தக் கட்டடம் கட்டி எந்தவிதப் பயன்பாடும் இல்லாமப் போய்டும் போலிருக்கு. முதலமைச்சர் ஐயா நீங்க இந்தக் கட்டடத்தைப் பார்வையிட்டு, எங்களுக்கு நல்ல கட்டடம் கட்டித் தரணும்'' என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ஏற்காடு: 'தரமற்ற கட்டுமானப் பணிகள்; முதல்வர் ஐயாதான் நடவடிக்கை எடுக்கணும்!" - மாணவர்கள் கோரிக்கை என்கிற தலைப்பில் ஜூனியர் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட பள்ளி கட்டடத்தை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு, மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை சரி செய்து தருவதாக உறுதியளித்திருக்கின்றனர்.
from Tamilnadu News https://ift.tt/gPLF6vQ
0 Comments