புதுக்கோட்டை: 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பு - மருத்துவக் கல்லூரி முதல்வர் சொல்வதென்ன?!

புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியின் கீழ் ராணியார் அரசு மருத்துவமனை(மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பிரிவு) செயல்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்தும் பரிந்துரை செய்யப்படும் தாய், சேய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், ராணியார் மருத்துவமனையில் கடந்த காலங்களில் பச்சிளங்குழந்தைகள் இறப்பு குறித்து ஆர்.டி.ஐயில் கேட்டிருக்கிறார். அதில், கடந்த 21 மாதங்களில் மட்டும் 247 பச்சிளங் குழந்தைகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர்

இதுகுறித்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறும்போது, ``மருத்துவமனையில் கடந்த 2020-ம் ஆண்டு 6,461 ஆக இருந்த மொத்த பிரசவங்களின் எண்ணிக்கை 2022-ல் 7,777ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 2020-ல் 1,641 பச்சிளங்குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு 136 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021-ல் 2,386 பச்சிளங்குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு 136 இறப்புகளும், 2022-ல் 2,486 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு 129 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனுமதிக்கப்படும் பச்சிளங்குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. அப்படி பார்க்கும்போது, இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. சிகிச்சை சரியில்லாததால், இந்த குழந்தைகள் இறக்கவில்லை. குறைபிரசவம், பிறவி குறைபாடுகள், நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தான், இறப்பு நேரிட்டிருக்கிறது. மருத்துவமனையில் போதுமான, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றன. பச்சிளங்குழந்தைகள் சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வரும்காலங்களில் இறப்புகள் தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.



from Tamilnadu News https://ift.tt/0aRlMfu

Post a Comment

0 Comments