உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதரங்களையும், வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் படுபயங்கரமாக சேதப்படுத்தப்பட்டது. ஆனாலும், இன்னும் உக்ரைன் - ரஷ்யா இடையே எந்த சமாதான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
உக்ரைனை சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. அந்தப்புகைப்படம் ரஷ்ய ராணுவம் உக்ரைனை எந்த அளவு சேதப்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் ட்விட்டரில், "10,000 பேர் தங்கியிருந்த டொனெட்ஸ்கில் உள்ள மரிங்கா நகரம் இப்போது எவ்வாறு மாறியுள்ளது என்பதை ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன.
மீண்டும் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதன் விளைவாக தற்போது வீடுகளின் இடிபாடுகள் குப்பைகளால் சூழப்பட்டுள்ளன. ரஷ்யாவின் போர்க் குற்றவாளிகள் அதைத் தரைமட்டமாக்குவதற்கு முன்பு வரை அது அமைதி நகரமாகவே இருந்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறது. மரிங்காவின் காவல்துறை அதிகாரி ஆர்டெம் ஷூஸ், "மரிங்கா நகரம் முற்றிலும் அழிந்துவிட்டது. பொதுமக்கள் அங்கு வாழ வழியில்லாத சூழலை ராணுவத்தினர் உருவாக்கிவிட்டனர்.
சேதமின்றி ஒரு கட்டடம் கூட அங்கு இல்லை. அந்த நகரத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ராணுவ நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் முழுவதுமாக வெளியேற்றி விட்டனர். இன்றைய சூழலில் அங்கு வாழ்வது சாத்தியமற்றது" எனத் தெரிவித்திருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/USPZ6pk
0 Comments