நாட்டில் எத்தனையோ நிதி மோசடிகள் நடந்தாலும் வட்டிக்கு ஆசைப்பட்டு மக்கள் பணத்தை போலி நிறுவனங்களில் முதலீடு செய்வது மட்டும் குறையவில்லை. பொதுமக்களிடம் மோசடிப் பேர்வழிகள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து மோசடி செய்து வருகின்றனர். புனேயில் அது போன்ற ஒரு மோசடி நடந்திருக்கிறது.
புனே கேம்ப் பகுதியில் `அஸ்டவிநாயக் இன்வெஸ்ட்மென்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திவந்தவர் செல்வகுமார் நாடார். இந்த நிறுவனம் பொதுமக்களிடம் வித்தியாசமான ஒரு திட்டத்தை அறிவித்தது. வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று அதைத் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனர். கடனுக்கான மாதாந்திர தொகையை தங்களது நிறுவனம் செலுத்தும் என்று ஆசைவார்த்தைக் கூறி மோசடி செய்திருக்கின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவந்த இந்த நிறுவனத்தில், புனே லோஹேகாவ் கர்மபூமி நகரில் வசிக்கும் சச்சின் புருஷோத்தம் பவார் ரூ.36.65 லட்சம் முதலீடு செய்திருந்தார். இது குறித்து சச்சின், ``அஸ்டவிநாயக் நிறுவன ஊழியர்கள் அடிக்கடி எனக்கு போன் செய்து உங்களுக்கு வேறு எதாவது வங்கியில் கடன் இருக்கிறதா, அந்தக் கடனை வேறு வங்கிக்குக் குறைந்த வட்டிக்கு மாற்றித் தருவதாகக் கூறினர். எனக்கு இரண்டு கடன்கள் இருந்தன. உடனே அந்தக் கடனை வேறு வங்கிக்கு மாற்றித்தருவதாகச் சொன்னார்கள். அதோடு தங்களது நிறுவனம் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் கணிசமான வட்டி கொடுப்பதாகத் தெரிவித்தனர்.
முதலீடு செய்வதற்கான நிதியை தாங்களே வங்கியில் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும், அதற்கான மாதாந்திர தவணைத் தொகையை ஒவ்வொரு மாதமும் தாங்களே எனது வங்கிக்கணக்கில் செலுத்திவிடுவதாகச் சொன்னார்கள். நானும் அவர்கள் பேச்சை நம்பி ரூ.36.65 லட்சத்தைக் கடன் வாங்கி முதலீடு செய்தேன். கடந்த டிசம்பர் வரை சரியாகத்தான் மாதாந்திர தவணையைச் செலுத்தினர். அதன் பிறகு மாதாந்திர தவணையைச் செலுத்தவில்லை.
இது குறித்து செல்வகுமாரிடம் கேட்டதற்கு வங்கி சிஸ்டத்தில் கோளாறு என்று கூறி சமாளித்தார். சில நாள்கள் கழித்தும் பணம் வராததால் என் பணத்தை திரும்பக் கொடுக்கும்படி கேட்டேன். உடனே அவர்கள் காசோலை கொடுத்தனர். ஆனால், அது பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது'' என்று தெரிவித்தார்.
திடீரென அஸ்டவிநாயக் அலுவலகமும் கடந்த மாதம் மூடப்பட்டுவிட்டது. அதன் உரிமையாளர் செல்வகுமார் தலைமறைவாகிவிட்டார். இதனால் சச்சின் உட்பட 17 பேர் புனே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்திருக்கின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் 200 பேரிடம் ரூ.300 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் மயூர், ``இதுவரை 200 பேர் எங்களிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். செல்வகுமார் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் அதிக சம்பளம் பெறுபவர்களை குறிவைத்து மோசடி செய்திருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவர்களின் தகவல்களை செல்வகுமார் விலைக்கு வாங்கியிருக்கிறார்.
டெலிகாலர்களைப் பணியில் நியமித்து ஏற்கெனவே இருக்கும் கடனைக் குறைந்த வட்டிக்கு மாற்றித்தருவதாக ஆசைவார்த்தை காட்டியிருக்கிறார். அதில் சிக்குபவர்களின் கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொடுத்துவிட்டு, தங்களது நிறுவனம் குறித்து எடுத்துக்கூறி பணத்தை முதலீடு செய்ய வைத்திருக்கின்றனர். அஸ்டவிநாயக் நிறுவனத்தில் வேலை செய்த ஆறு பேரிடம் வாக்குமூலம் வாங்கியிருக்கிறோம். செல்வகுமார் தலைமறைவாகிவிட்டார். அவரைத்தேடி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.
from Latest news https://ift.tt/fQ4qi0z
0 Comments