வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் இரண்டு மாநிலங்களில் பாஜக தன் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேகாலயாவில் ஆட்சி அமைக்கும் மாநில கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. இதில், பாஜக வெற்றி என்பதைக் கடந்து காங்கிரஸின் படுதோல்வி சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக கர்நாடகா, தெலங்கானா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலிலாவது காங்கிரஸ் மீண்டு வருமா?…என்னும் கேள்வி எழுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பைப் பாஜகவிடம் பறிக்கொடுத்து வருகிறது. அந்த நிலை மேலும் மோசமாகி எதிர்க்கட்சி என்னும் நிலையை அடையக் கூட திணறி வருகிறது. அதைத்தான் நடந்து முடிந்த மூன்று வடகிழக்கு மாநிலங்களில் வெளியாகி இருக்கும் முடிவுகளும் உணர்த்துகிறது.
வடகிழக்கு தேர்தல் முடிவுகள் வெளியான பின், செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் , ``மூன்று மாநில தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தையே தருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸுக்கு எதிரான வெற்றி, மகாராஷ்டிராவில், பாஜக-ஆர்.எஸ்.எஸ் கோட்டையாக இருந்த கஷ்பா பெட் தொகுதியில் கிடைத்த வெற்றி மற்றும் தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெற்ற வெற்றி என அனைத்தும் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது” எனப் பேசியிருந்தார்.
ஆனால், மொத்தமாகப் பார்த்தால் காங்கிரஸின் செய்லபாடுகள் மக்களுக்கும் இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் தங்களை மீட்டெடுக்கும் வழி என்ன என்பதை எப்போது கண்டறிவார்கள். அதைத் தற்போது உணர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே வரும் தேர்தலில் தங்களுக்கான வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்பதே அரசியல் வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசியதாவது, ``வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பெற்ற வெற்றியை மட்டும்தான் பாஜக தன் வெற்றியாகக் கொண்டாட முடியும். மேகாலயா, நாகாலாந்தில் பெற்றது, மாநில கட்சிகளின் வெற்றியே அன்றி அது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல. அதேபோல், நாகாலாந்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநில என்.டி.பி.பி (National Democratic Progressive Party) கட்சி தேர்தலை சந்திக்கவில்லை. முடிவுகள் வெளிவந்த பின்பு, எங்கே பாஜகவை சேர்க்காமல் ஆட்சி அமைத்தால், மணிப்பூரில் நடந்தது போல் அதிகாரம் தங்களைவிட்டு போய்விடுமோ… என்னும் அச்சத்தில் தான் கூட்டணி அமைத்திருக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சிக்கு இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றிகளை எளிமையாகக் கடந்திட முடியாது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ் வலுப்பெற்ற தொகுதியான கஷ்பா பெத்த்தில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுருக்கிறது. இதைத் தவிர்த்திட முடியாது.
மோடி, அமித் ஷா இருவரும் ஒரு தேர்தலை தவமாக கருதி செயல்படுகிறார்கள். குறிப்பாக, அடிமட்டத்தில் அவர்களுக்கு வேலை பார்க்க ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்புகள் ஆதரவு இருக்கிறது. தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் தொகுதியில் இறங்கி வேலை செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கு இந்த பலம் இல்லை.
அவர்கள் கட்சியில் அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர்கள் யாரும் கிடையாது. அவர்களுக்கு இறுதி நம்பிக்கையாக இருப்பது ”மக்கள்” மட்டுமே. பாஜகவின் அரசியல் தவத்தையும் மீறி, மக்கள் பாஜகவை எதிர்க்கும் மனநிலைடை அடைய வேண்டும். அப்படி நினைத்து பாஜகவுக்கு மாற்றாக ஒரு கட்சி வர வேண்டும் என நினைத்தால் வரும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பிருக்கிறது.
ஆகவே, பாஜக கட்சி பெரிதாக வெல்லாத வடகிழக்கு மாநில தேர்தலை முன்வைத்து வரும் 5 மாநிலங்களில் காங்கிரஸ் மீளுமா… என்னும் கேள்வியைக் கேட்க முடியாது. காரணம், கர்நாடக மற்றும் மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மேலும், பாரத் ஜோடோ யாத்திரைகள் இந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அது அடிமட்ட அளவில் காங்கிரஸ் பலப்படுத்த பேரூதவியாக இருந்திருக்கிறது. எனவே, இது நிச்சயம் வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் பின்னடைவு எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதில் மாற்ற செய்ய வேண்டும். அதை செயல்படுத்தினால் மட்டுமே காங்ரஸால் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/XOK6vQB
0 Comments