`அதிமுக பாஜகபோல் பிரிந்து வாழக்கூடாது; திமுக கூட்டணிபோல் சேர்ந்து வாழணும்’ - உதயநிதியின் வாழ்த்து

திருமண நிகழ்ச்சிகள், சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்தல், பள்ளிகளில் ஆய்வு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம், கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி, நாமக்கல் நகரில் உள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில், கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலையை திறந்து வைத்தல், மோகனூர் சர்க்கரை ஆலையை பார்வையிடல் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, அமைச்சர் உதயநிதி நாமக்கல் வருகை தந்தார். காலையில் வெட்டுக்காட்டுப் பகுதியில் நடைபெற்ற, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுச்சாமியின் பேரன் நவஜீவன், வித்யா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

திருமண நிகழ்வில் உதயநிதி

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, தி.மு.க கூட்டணியைப் போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி போல் பிரிந்து வாழக்கூடாது. அப்படி வாழ்ந்தால், ரோட்டில் போவோர் கூட கருத்து சொல்வார்கள்" என்று பேசினார். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொண்டவர், மாலையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

அதன்பிறகு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``தனியார் இடத்திலாவது இந்த சிலையை நாங்கள் வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள். நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள்தான், நாமக்கல் கவிஞருடைய சிலை தனியார் இடத்தில் அமையக்கூடாது, அது பொதுவான இடத்தில், அதுவும் ஒரு கல்லூரியில் மாணவ, மாணவிகள் பயிலும் இடத்தில் அமைய வேண்டும் என்று சொல்லி, இங்கே சிலை அமைய வழிவகை செய்தார். கவிஞருடையது, எளிமையான குடும்ப பின்னணி. ஆனால், தன்னுடைய வலிமையான தமிழ் புலமையால் கவிதைகள் எழுதி புகழ்பெற்றவர். மட்டுமல்லாமல் விடுதலைக்காக முழுமையாக தமிழ் மொழியை பயன்படுத்தியவர். அதேபோல், நம்முடைய கவிஞர் அவர்கள் சிறந்த பேச்சாளர் கூட. அவருடைய மேடைப்பேச்சுகள் சாதாரண மக்களிடையே விடுதலை போராட்ட உணர்வை ஏற்படுத்தியது.

நாமக்கல் கவிஞர் சிலையை திறக்கும் உதயநிதி

நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்து சுதந்திரத்திற்காக போராடினார். 10 வருட காலம் முழுவதும் காங்கிரஸூக்காக பாடுபட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதில், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜி அவர்களுடன் கலந்து கொண்டவர் தான் நம்முடைய நாமக்கல் கவிஞர். அப்பொழுதுதான், `கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்ற தேச பக்தி பாடலை இயற்றினார்.

அந்த பாடல் ஏற்படுத்திய விடுதலை போராட்ட உணர்வு என்பது மிக அதிகம். பின்னர் ஒரு நாள் நாமக்கல் கவிஞர் காந்தியை சந்தித்தபோது, அந்த பாடலை இயற்றி தந்ததற்காக அவரை பாராட்டினார். அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த நம்முடைய நாமக்கல் கவிஞரின் புகழை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம்முடைய கடமை. இப்பொழுது இருக்கிற நம்முடைய சமூகம் அனைத்தையும், அனைவரையும் மறந்து விடக் கூடிய சமூகம். நம்முடைய முதலமைச்சர், கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்து பல முன்னோடி திட்டங்களை தீட்டி வருகிறார் என்பது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வரவழைக்க முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வந்தார்.

விழாவில் உதயநிதி

அவர்கள் காலையில் ஸ்கூலுக்கு வரவேண்டும் என்றால், பசியோடு வரக்கூடாது, மாணவர்கள் வந்து படிக்கணும், மாணவ மாணவிகள் படிப்பு முக்கியத்துவம் கொடுக்குறோம் என்ற ஒரே நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்ட திட்டத்தில், தற்போது கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுவருகிறார்கள். அதேபோல், இலவச பேருந்து பயணம் அறிவிப்பை தொடர்ந்து, இந்த 20 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 250 கோடி பயணங்களை மகளிர் இலவசமாக கட்டணமில்லாமல் மேற்கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் முன்னேற இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. அதுவும் பத்தோடு பதினொன்றோடு நிக்காமல் நாம் என்னவாக வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆழ் மனதில் ஒரு எண்ணம் இருக்கும். முதலில் அது என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறகு, அதை நோக்கி பயணிக்க தொடங்குங்கள். உழைக்கத் தொடங்குங்கள். உங்களால் முடியாது என்று இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. அப்படி, உங்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும், உங்களுடைய வளர்ச்சியிலும் ஒரு அண்ணனாக கூட இருந்து நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கான உத்தரவாதத்தை தரவே உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன். இந்த சிலையை திறக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் பொன்முடி அவர்களுக்கும், மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் அவர்களுக்கும், நாமக்கல் கவிஞருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவில் உதயநிதி

இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும், இதில் கலந்து கொண்டவர்களுக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து விடைபெறுகிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான், உங்களுடைய அன்பு சகோதரராகத்தான் நான் எப்போதுமே இருப்பேன். சிலை திறப்பதற்காக மட்டும் என்னை இங்கே கூப்பிடவில்லை. பல்வேறு கோரிக்கைகளையும் வைத்திருக்கிறார்கள். அவற்றையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்றார்.



from Tamilnadu News https://ift.tt/WxA8fsy

Post a Comment

0 Comments