``முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி..." - திமுகவை சாடிய அண்ணாமலை

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பரப்பப்பட்ட வதந்தி பீகார் சட்டமன்றம் வரை எதிரொலித்தது. அதன் காரணமாக பல்வேறு அரசியல் சலசலப்புகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன. இது குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, "வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, `வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?’ என்று கேட்பது வெட்கக் கேடு" என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆர்.எஸ் பாரதி

அதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, "நான் இரட்டை வேடம் போடுவதாக, ஆர்.எஸ் பாரதி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது தி.மு.க-வினருக்கு இயல்பானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப்பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டைவேடம் தி.மு.க-விற்கு கைவந்த கலை.

`இந்தி தெரியாது போடா’ என்று முதல்வரின் மகன் டி-ஷர்ட் கலாசாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கி வைக்க... விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, திமுகவின் எம்.பி ஒரு பொய்யான புகாரை வழங்கி... வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் தொடங்கிவைத்தார். தற்போது சமூகங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், "வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" என்று கேட்டிருந்தேன். அதனால்தான் பிரச்னையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ஒரு சில வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட உடன், இந்திய தலைமை தாங்க தி.மு.க-வின் தலைமை கண்ட பகல் கனவை நினைத்து, எங்களுக்கெல்லாம் பரிதாபப்படத்தான் தோன்றியதே தவிர, பற்றி எரியவில்லை. பா.ஜ.க மொழித் திணிப்பு செய்வதாக, குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் ஆர்.எஸ் பாரதி அவர்களே, அறுபதுகளில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த, தி.மு.க செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் “தமிழை கட்டாயப் பாடம்” ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க, தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.

கனிமொழி - ஸ்டாலின்

வெறுப்பையும் பகையையும் வெளிப்படுத்துவதாக என் மீது ஆர்.எஸ் பாரதி வெளியிட்ட கூற்று ஒரு வகையில் சரிதான். தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாட்டின் மீது வெறுப்பும், அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி மீது பகையும், எனக்கும், நான் சார்ந்த இயக்கத்தினருக்கும் எப்போதும் உண்டு. வட மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் தமிழகத்திற்கு எதிரான கண்டனக் குரல்களை கண்ட பிறகு, எழுந்த அச்சத்தினால், பிள்ளையை கிள்ளிவிட்ட நீங்கள் தொட்டிலாட்ட முன் வந்திருக்கிறீர்கள். இரட்டை வேடம் அல்ல, நாடக தி.மு.க-வினர் இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.

இப்படி, தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? காவல்துறை அதிகாரிகளுக்கும், தி.மு.க-வினருக்கும், தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலே, காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? என்ற விசாரணையை சி.பி.ஐ தொடங்க வேண்டும்.

அண்ணாமலை

அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டி.ஜி.பி அவர்கள், திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?. ஆகவே தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சி.பி.ஐ விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரியவரும். நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from Tamilnadu News https://ift.tt/U9phK7d

Post a Comment

0 Comments