கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், முன்பு நகராட்சியாக இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் குறுகலான சாலையில் இருப்பதால் போக்குவரத்து சிரமம் இருந்துவந்தது. அதை போக்கும் விதமாக அன்றைய நகராட்சி கமிஷனராக இருந்த சரவணகுமார் புதிய அலுவலகம் கட்ட தேர்வு செய்த இடம்தான் அண்ணா விளையாட்டு மைதானம் அருகில் உள்ள கலைவாணர் அரங்கம் பகுதி.
பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டும்போதே சில எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் அதையெல்லாம் மீறி பத்தரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்டும்பணி நடந்தது. 1920-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நகராட்சியாக மாற்றப்பட்ட நாகர்கோவில் நகராட்சி நூற்றாண்டை கொண்டாடும் சமயத்தில் 2019-ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நகராட்சி கமிஷனராக இருந்த சரவணகுமார் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் கமிஷனராக மாறினார். நகராட்சி அலுவலகம் மாநகராட்சி அலுவலகமாக மாறியது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வந்ததால் புதிதாக கட்டப்படும் மாநகராட்சி அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவேண்டும் என அ.தி.மு.க தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
அந்த சமயத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் யாரும் இல்லை. அதேசயம் மாநகராட்சி புதிய அலுவலகத்துக்கு கலைவாணர் பெயரும், அங்குள்ள அரங்கத்துக்கு நேசமணி பெயரும் வைக்கப்படும் என அப்போது கமிஷனராக இருந்த இப்போதைய தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் அதிரடியாக அறிவித்தார். அதற்காக சில தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த சமயத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று மாநகராட்சி முதல் மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த மகேஷ் பொறுப்பேற்றார். அவர் புதிய மாநகராட்சி அலுவலகத்துக்கு 'கலைஞர் மாளிகை' என பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்.
கலைஞர் மாளிகை என பெயர் வைக்க பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு தலையிட்டு புதிய கட்டடங்ககுக்கு பெயர் வைப்பது மாநில அரசே முடிவு செய்யும் என அப்போது அறிவித்தது. இதற்கிடையே மாநகராட்சி புதிய அலுவலகத்தை மார்ச் 7-ம் தேதி (நாளை) முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. புதிய அலுவலகத்துக்கு பெயரிடாமல் திறப்புவிழா நடத்திவிட்டு ரகசியமாக கலைஞர் பெயரை சூட்ட மேயர் மகேஷ் முயல்வதாக பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டை கிளப்பினார். மேலும், கலைவாணர் பெயரை சூட்டிவிட்டு மாநகராட்சி அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் முதல்வர் திறப்புவிழாவை புறக்கணிக்க வேண்டும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், 'நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டடம் ஏற்கனவே இருந்தவாறே கலைவாணர் பெயரிலேயே அழைக்கப்படும்' என கூறப்பட்ட்டிருந்தது. மேலும் புதிய மாநகராட்சி கட்டடத்தில் 'கலைவாணர் அரங்கம்' என்ற பெயர்பலகையும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் பெயர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. அதே சமயம் அலுவலகத்தின் உள் அமைக்கப்பட்டுள்ள கூட்ட அரங்குக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
from Tamilnadu News https://ift.tt/q9vArbt
0 Comments