பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவு, இதுதான் காரணம்.... மருத்துவ விளக்கம்!

பிரபல கர்னாடக இசைக்கலைரும் பின்னணிப் பாடகியுமானவர் பாம்பே ஜெயஸ்ரீ. வசீகரா, சுட்டும் விழிச்சுடரே, முதல் கனவே... முதல் கனவே உள்பட பிரபலமான பல திரைப்பாடல்களைப் பாடியவர் இவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இசைக் கச்சேரி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்குச் சென்றுள்ளார். அப்போது திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலில் மயங்கி விழுந்துள்ளார். சுயநினைவை இழந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாம்பே ஜெயஸ்ரீ

பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு ஜெயஶ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்துள்ளது. கோமா நிலையில் இருந்தவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இப்போது அவர் நலமாக உள்ளார் என்றும், அவரின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவது ஏன்.... அது யாருக்கு ஏற்படும்... தீர்வுகள் உண்டா?

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரியிடம் பேசினோம்....

``ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்படும் விகிதம் ஆண்களுக்கு அதிகம். ஆனால் மெனோபாஸ் வந்துவிட்ட பெண்களுக்கு ஆண்களுக்கு இணையாக மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கும்.

பிரெயின் அட்டாக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். ஈஸ்ட்ரோஜென் எனப்படும் பெண் ஹார்மோன் சுரக்கும்வரை மூளைக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் மாரடைப்பு மாதிரியே பிரெயின் அட்டாக் ஆபத்தும் பெண்களுக்கு அதிகரிக்கும். புகை, மதுப் பழக்கங்கள், கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை போன்ற விஷயங்கள் பிரெயின் அட்டாக் ஆபத்தை ஆண், பெண் பாகுபாடின்றி அதிகரிப்பவை.

நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை

மூளையை பாதிக்கும் மூன்றுவித பாதிப்புகளில் ஒன்று 'ஹெமராஜிக் ஸ்ட்ரோக்'. மூளையில் ரத்தம் கசிவதால் ஏற்படுவது 'ஹெமராஜிக் ஸ்ட்ரோக்' (Hemorrhagic Stroke). இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பிறவியிலேயே ரத்தக்குழாய்களின் சுவர்கள் பலவீனமாக இருக்கலாம். மூளைப்பகுதியில் குட்டி பலூன் போல ஒட்டிக்கொண்டிருக்கும். அனியூரிசம் (aneurysm) எனப்படும் இது, பல வருடங்களாக சைலன்ட்டாக இருந்து திடீரென வெடிக்கலாம்.

ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தாலும் ரத்தக்குழாய் வெடித்து மூளையில் ரத்தம் கசியலாம். மிக அரிதாக தலையில் அடிபடுவதால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். இதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்படும்.

'ஹெமராஜிக் ஸ்ட்ரோக்' பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். ஏனென்றால் அந்த அடைப்பானது அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கட்டி போல காட்சியளிக்கும். அறுவை சிகிச்சையின் மூலம் ரத்த அடைப்பை நீக்கிவிட்டு, மண்டை ஓட்டை மீண்டும் பொருத்த மாட்டோம். ஸ்ட்ரோக் பாதித்த உடனே மூளை வீங்கிவிடும். அந்த வீக்கம் வடியும்வரை மண்டையோட்டை பத்திரப்படுத்தி வைப்போம். சம்பந்தப்பட்ட நபர் நார்மலான பிறகு மண்டையோட்டை மீண்டும் பொருத்துவோம்.

ஹார்ட் அட்டாக் போலவே ஸ்ட்ரோக்கும் மீண்டும் வர வாய்ப்புகள் உண்டு. எனவே ஒருமுறை வந்ததும் வாழ்வியல் மாற்றங்களில் கவனம் அவசியம். பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, உடற்பயிற்சி போன்ற புனர்வாழ்வு சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டியது மிகமிக முக்கியம்.

உங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்வது, ஆக்டிவ்வாக இருப்பது, யோசிப்பது போன்றவை எல்லாம் மூளைக்கான பயிற்சிகளாக இருக்கும். ஆனால் அதே வேலைகளை ஸ்ட்ரெஸ்ஸுடன் செய்யும்போது அது மூளைக்கு நல்லதல்ல...'' அதிமுக்கிய மெசேஜுடன் முடிக்கிறார் டாக்டர் ப்ரித்திகா சாரி.



from Latest news https://ift.tt/5gl4YXS

Post a Comment

0 Comments