காங்கிரஸுடன் கைகோத்த 17 எதிர்க்கட்சிகள்... மம்தா இன்; உத்தவ் அவுட்! - நடந்தது என்ன?!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ளன. நேற்று இரவு காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கார்கே இரவு விருந்து கொடுத்தார். இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்து கொண்டனர். அதோடு திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அதானி விவகாரத்தை ஒருங்கிணைந்து கையாள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்திருப்பது அபூர்வமான ஒன்றாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸை எதிர்த்தே அரசியல் செய்வதால் அக்கட்சிகளால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்பட முடியவில்லை. நேற்று இரவு கூடிய கூட்டத்தில் ராகுல் காந்தியும் பேசினார்.

இக்கூட்டத்தில் பேசிய பெரும்பாலான தலைவர்கள் பிரச்னை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்கப்படும் என்றும், 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கவேண்டியதில்லை என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜவஹர் இது குறித்து கூறுகையில், ``இக்கூட்டம் நாம் அனைவருக்கும் எதிராக ஒருங்கிணைந்த மற்றும் ஜனநாயக விரோத தாக்குதல்களுக்கு எதிரான ஒற்றுமையின் சிறப்பு அடையாளமாகும்” என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில், ``ஜனநாயகத்தை அழித்து அனைத்து அரசு அமைப்புகளையும் சீர்குலைக்கும் மோடி அரசுக்கு எதிராக பிரசாரத்தை தொடர அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு மித்த குரலில் முடிவு செய்துள்ளன. பயமுறுத்துதல் மற்றும் மிரட்டுதல் போன்ற மோடி அரசின் செயல்களை எப்படி எதிர்கொள்வது மற்றும் அதற்கு தீர்வு காண்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பிரதிபலிக்கும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) கலந்து கொள்ளவில்லை. ராகுல் காந்தி நேற்று முந்தினம், `மன்னிப்பு கேட்க நான் சாவர்கர் இல்லை’ என்று பேசியிருந்தார். இதற்கு உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதோடு ராகுல் காந்தியின் இக்கருத்தால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.

இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, ``ஒரு மனிதனைக் காப்பாற்ற, மோடி 140 கோடி மக்களின் நலன்களை மிதிக்கிறார். பிரதமரின் நண்பரை காக்க, மக்கள் பிரச்னைகளை விவாதிக்கும் நாடாளுமன்றத்தை பா.ஜ.க முடக்குகிறது.

எந்த தவறும் செய்யவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் இருந்து அரசு ஏன் பின்வாங்குகிறது?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

`வீட்டை காலி செய்ய உத்தரவு’

ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்த கையோடு அவரை அரசு இல்லத்தை காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு டெல்லி துக்ளக் சாலையில் எம்.பி.என்ற முறையில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டிலிருந்து அதில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். தற்போது எம்.பி.பதவி பறிக்கப்பட்டு இருப்பதால் மக்களவை ஹவுசிங் கமிட்டி அந்த வீட்டை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு கடிதம் கொடுத்துள்ளது.

ஏப்ரல் 22-ம் தேதி வரை வீட்டை காலி செய்ய ராகுல் காந்திக்கு அரசு அவகாசம் கொடுத்திருக்கிறது. கடந்த 23-ம் தேதி சூரத் கோர்ட் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை கொடுக்கப்பட்ட அடுத்த நாளே ராகுல் காந்தியின் பதவியை பறித்து பாராளுமன்ற செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Tamilnadu News https://ift.tt/qjmzfEe

Post a Comment

0 Comments