பிரதமர் மோடியை உதயநிதியை சந்தித்தன் பின்னணி அரசியல் என்ன?!

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டுநாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், பிப்ரவரி 28-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரந்திர மோடியைச் சந்தித்தார். அமைச்சரான பிறகு மோடியை முதல்முறையாக உதயநிதி சந்திப்பதால் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த உதயநிதி, “டெல்லி வரும்போது தன்னை வந்து சந்திக்கும்படி மோடி சொல்லியிருந்தார். இந்த சந்திப்பில் குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த சில முக்கிய நிகழ்வுகளை எடுத்துக் கூறினார். சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலையை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். அதற்கு பிரதமர் சில விளக்கங்களைத் தந்தார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டேன்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கொண்டேன். ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்க நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஒன்றிய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன்.” என்றார்.

உதயநிதி

பிரதமரைச் சந்தித்தற்கு உதயநிதி சில காரணங்களை அடுக்கினாலும், சிங்கப்பூர் பயணத்திலும், டெல்லி பயணத்திலும் சில உள் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்தார் உதயநிதி என்கிறார்கள். அது குறித்து விவரம் அறிந்த, உதயநிதிக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.

உதயநிதி வெளிநாட்டுப் பயணம், டெல்லிப் பயணம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், ``தனது திருமணநாளையொட்டி சிங்கப்பூருக்கு மனைவி கிருத்திகாவுடன் சென்றிருந்த உதயநிதி, குடும்பத்தினருடன் தனியே நேரம் செலவழித்திருக்கிறார். அப்போதுவரை, டெல்லி அசைன்மென்ட் அவருக்குத் தரப்படவில்லையாம். திடீரென முதல்வர் தரப்பிடமிருந்து, ‘பிரதமர், உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சரை பார்த்துவிட்டு வாங்க...’ என அறிவுறுத்தல் வரவும்தான், சிங்கப்பூரிலிருந்து நேராக டெல்லி சென்றாராம் உதயநிதி.

ஒரு மாநில முதல்வருக்கு வழங்கப்படும் உச்சபட்ச பாதுகாப்பு டெல்லியில் உதயநிதிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்வுகள் இருந்ததால் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் உதயநிதிக்கு அப்பாயின்மென்ட் மறுத்திருக்கிறார்கள். ஆனால், பிரதமரிடமிருந்து உடனே அப்பாயின்மென்ட் கிடைத்தது. விளையாட்டுத்துறை சார்பாக, 234 சட்டமன்றத் தொகுதியிலும் தலா ஒரு விளையாட்டு மைதானம் கட்டப்படும்’ என தி.மு.க அறிவித்திருக்கிறது. ஆனால், அதற்குப் போதுமான நிதி மாநில அரசிடம் இல்லை. இதனால் தனது துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரிதான் பிரதமரை அவர் சந்தித்திருக்கிறார். தலைவருக்கு அடுத்து உதயநிதிதான். எனவே, அதற்காக, உதயநிதியைப் புரமோட் செய்யும் வேலைகள் தீவிரமாகியிருக்கின்றன. பிரதமருடனான அவர் சந்திப்பும் அந்தவகையைச் சேர்ந்ததுதான். தவிர, பிரதமருடன் நேருக்கு நேர் அறிமுகம் ஏற்படுவதும் ஒருவகையில் மேலிட குடும்பத்துக்கு நல்லதுதானே...’ என்றார்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - பிரதமர் மோடி

மேலும், ``சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சராகவும் இருப்பதால் மார்ச் 20-ல் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டை ஒட்டியும் சில விவகாரங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டது. மத்திய அரசு தரப்பிலிருந்து மாநில அரசுக்கு பல்வேறு துறைகளிலிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகையையும் விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது” என்றனர். ஆனால், இந்த சந்திப்பு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகத்தான், ``பா.ஜ.க., பா.ம.க இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என திருமாவளவன் பேசியிருக்கிறார்” என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.



from Tamilnadu News https://ift.tt/DZOHbu9

Post a Comment

0 Comments