அரசாங்கமாகட்டும், தனிநபர்களாகட்டும் கடன் வாங்குவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் கடனை உரிய காலத்தில் சரியாகத் திருப்பிச் செலுத்தும் திறன் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு வாங்குவதே சரியான முடிவாக இருக்கும். ஆனால், தமிழக அரசின் கடன் தொகை அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போவதைப் பார்த்தால், மனசு பதறத்தான் செய்கிறது.
எட்டு ஆண்டுகளுக்குமுன் அதாவது, 2015-ல் தமிழக அரசுக்கு இருந்த கடன் ரூ.2,11,000 கோடி மட்டுமே. அது 2021-ல் ரூ.4,80,000 கோடியாக உயர்ந்து, 2022-ல் ரூ.5,70,000 கோடியாக அதிகரித்தது. கடந்த வாரம் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டின்படி, இந்த நிதி ஆண்டு முடிவில் தமிழக அரசின் கடன் ரூ.7,26,028 கோடி என்கிற அளவைத் தொடும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் தமிழக அரசாங்கம் புதிதாக ரூ.1,43,197 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டு இருக்கிறது. இதில் ரூ.51,331.79 கோடி கடனைத் திரும்பக் கட்டுவதற்காகச் செலவிடப்போகிறது.
ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளின் கடன் அவற்றின் மொத்த பொருள் உற்பத்தியில் (GSDP) 50% சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும்போது, தமிழக அரசின் கடன் 2022 மார்ச் படியே 32% என்கிற அளவில் தான் இருக்கிறது. ஏறக்குறைய 16 மாநிலங்களின் கடன் அளவானது, தமிழக அரசைவிட அதிகமாக இருக்கிறது.
கோவிட்டுக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த நிலையில், தவிர்க்க முடியாத பல்வேறு செலவுகளை செய்ததுடன், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார் நிதியமைச்சர். அதே சமயம், அரசின் வருவாய்ப் பற்றாக்குறையை 1.23% என்கிற அளவுக்குக் குறைத்திருக்கிறார். அடுத்த சில ஆண்டுகளில் பற்றாக்குறையே இல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்போவதாகவும் நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார்.
ஆக மொத்தத்தில், நிதித்துறையை சரியாக நிர்வாகம் செய்வதில் தமிழக நிதியமைச்சர் சிறப்பாகவே செயல்படுகிறார் என்பதை, பல்வேறு புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதே சமயம், ஆண்டுக்கு ஆண்டு பெருகிவரும் கடனை மேற்கொண்டு வளர விடாமல், அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சர் எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
பத்திரப்பதிவு தொடங்கி, கனிம வளங்கள் விற்பனை வரை பல்வேறு விஷயங்கள் மூலம் அரசின் வருமானத்தை இன்னும் கணிசமாக உயர்த்த முடியும். அரசின் பலவிதமான சலுகைகள், தேவையற்றவர்களுக்கும் போய்க்கொண்டிருக் கின்றன. அவற்றையெல்லாம் முறைப்படுத்துவதன் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளை எல்லாம் எடுத்தால், கட்சிக்குள்ளேயே பலரது பகையை அவர் சம்பாதிக்க வேண்டியிருக்கும். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடிக்குள் கொண்டு வந்து, இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிக்காட்ட முடியும். இதற்கான நடவடிக்கையை நிதியமைச்சர் எடுப்பாரா?
- ஆசிரியர்
from Tamilnadu News https://ift.tt/OWq18VA
0 Comments