ஒன் பை டூ

பாபு முருகவேல், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், அ.தி.மு.க

``சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்... எதிர்க்கட்சியாக இருக்கும்போது, போராளி அவதாரம் எடுப்பதும், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவதும் தி.மு.க-வுக்குப் புதிது இல்லை. ‘நீட் தேர்வை எங்களால் மட்டுமே ரத்துசெய்ய முடியும். அந்த ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான்’ என்று மேடைதோறும் முழங்கியவர்களில் முக்கியமானவர் உதயநிதி. ஆட்சிக்கு வந்த பிறகு, ‘எல்லோரும் ஒன்றாகப் போராடுவதும், தொடர் சட்டப் போராட்டம் நடத்துவதும்தான் அந்த ரகசியம்’ என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறார். இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிராக அம்மா அவர்கள்தான் முதன்முதலாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர்கள் இத்தனை நாள்களாக ‘ரகசியம்’ என்று சொல்லி வந்ததெல்லாம் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டதுதானே... ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக சொல்வது ஒன்று, வந்த பிறகு செய்வது வேறொன்று. நகைக் கடன் தள்ளுபடியில் ஆரம்பித்து, அனைத்துக் குடும்பத்தலைவிகளுக்கும் 1,000 ரூபாய் அறிவிப்பு வரை இதே நிலைமைதான். பொய் வாக்குறுதிகளால் ஆட்சியைப் பிடித்து, எதையும் செய்யாமல் ஈரோடு இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற்றுவிட்டு மமதையில் திரியும் தி.மு.க-வினருக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களே பதிலடி கொடுப்பார்கள்.’’

பாபு முருகவேல், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

``பாவம் பழினிசாமி. திக்கற்று நிற்பவர், என்ன பேசுவதென்று தெரியாமல் பேசித் திரிகிறார். அரசு சட்டப் போராட்டம் நடத்தும்போது, மக்களும் ஆதரவாக ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் உதயநிதி சொல்லியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது... நீட் தேர்வுக்கு எதிராக 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் வெற்றிபெற்றவர் கலைஞர். 2014-ம் ஆண்டு, `நீட் தேர்வு செல்லாது’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. அதன் பிறகு 2016-ல் பா.ஜ.க அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின் வழியாக இந்திய மெடிக்கல் கவுன்சில் நீட் தேர்வைக் கொண்டுவந்தது. இந்த விவரம்கூடத் தெரியாமல், 1956-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட உலக அறிவாளி எடப்பாடி. தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்த ஒரே அயோக்கிய அரசியல்வாதியும் அவர்தான். சொன்னதைச் செய்யும் கழக அரசு, மகளிருக்கான 1,000 ரூபாய் உதவித்திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறது. ஏறத்தாழ ஒரு கோடி ஏழைத் தாய்மார்கள் இந்தத் திட்டத்தால் பயனடையப்போவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சலில் எடப்பாடி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார். அ.தி.மு.க-வை மக்கள் தூக்கியெறிந்து நீண்டகாலம் ஆகிவிட்டது.’’



from Latest news https://ift.tt/Fh76UPs

Post a Comment

0 Comments