`திருச்சூர் அல்லது கண்ணூர் தொகுதி வேண்டும்' - அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்த சுரேஷ் கோபி

கேரள மாநிலம் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரள மாநிலத்துக்கு ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. கடந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு 45 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியிருந்தது. பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடைசெய்ததன் மூலம் கேரளாவை பாதுகாப்பான மாநிலமாக மாற்றியுள்ளோம். கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸாரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் வாக்குவங்கி அரசியல் செய்கிறார்கள். குப்பைகிடங்கில் தீ பிடித்ததால் 11 நாள்களாக கொச்சி புகைந்துகொண்டிருக்கிறது. ஆனால் மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

திருச்சூரில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா

கேரளாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் முடியாது. கம்யூனிஸ்ட் அரசு லைஃப் மிஷன் ஊழலில் மூழ்கியுள்ளது. முதல்வரின் முன்னால் முதன்மைச் செயலாளர் சிறையில் இருப்பதற்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் சொல்ல வேண்டும். தங்கம் கடத்தல் வழக்கில் கம்யூனிஸ்டுகள் மவுனமாக இருக்கிறார்கள். ஆனால் கேரள மக்கள் பேசாமல் இருக்கமாட்டார்கள். 2024 தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள். கேரளாவில் மாறி மாறி அடித்துக்கொள்ளும் காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் திரிபுராவில் ஒன்றாக நின்றார்கள். அவர்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக ஒன்று சேர்ந்தார்கள். ஆனால், மக்கள் பா.ஜ.க-வை தேர்ந்தெடுத்தனர்" என்றார்.

இந்த கூட்டத்தில் அமித் ஷா முன்னிலையில் பேசிய சினிமா நடிகரும், முன்னாள் மேல்சபை எம்.பி-யுமான சுரேஷ் கோபி, "2024 நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு திருச்சூர் தொகுதி வேண்டும். எந்த கோவிந்தன் (சி.பி.எம் மாநில செயலாளர்) வந்தாலும் சரி. திருச்சூரை நான் இதயப்பூர்வமாக கேட்கிறேன். திருச்சூரை நீங்கள் எனக்கு தந்தால், நான் வென்றுகாட்டுவேன். திருச்சூர் மட்டுமல்ல கண்ணூரில் வேண்டுமானாலும் நான் போட்டியிட தயார். கோவிந்தனும் அவரின் முதலாளியும் புரிந்துகொள்ளுங்கள், கேரளாவை நாங்கள் பிடித்தே தீருவோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

2024-ல் நான் வேட்பாளராக போட்டியிட வேண்டுமானால் இரண்டு தலைவர்கள்தான் முடிவு செய்ய முடியும். வேறு யாருக்கும் முடிவெடுக்க உரிமை இல்லை. என்னை வேட்பாளராக்க முடிவு செய்தால் திருச்சூர் அல்லது கண்ணூர் தொகுதி வேண்டும் என அமித் ஷாவிடம் கேட்டுக்கொள்கிறேன். வெற்றி முக்கியம் அல்ல. வேரடி மண்ணை கிளற வேண்டும். இங்குள்ள மக்களுக்கு அவ்வளவு துரோகம் செய்துள்ளார்கள். கண்ணூரை எனக்கு தாருங்கள், நான் தயாராக இருக்கிறேன்" என்றார்.



from Tamilnadu News https://ift.tt/4W2LgqM

Post a Comment

0 Comments