"சாவர்க்கர் எங்கள் கடவுள்; அவரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது"- ராகுலை எச்சரித்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரேயும், அவரின் மகன் ஆதித்யா தாக்கரேயும் மகாராஷ்டிரா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாலேகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நேற்று இரவு உத்தவ் தாக்கரே பேசினார். இதில், ``ஹின்டன்பர்க் பல ஆயிரம் கோடி ஊழலை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் அதற்கு பா.ஜ.க பதிலளிக்கவில்லை. பிரதமர் மோடியும் இதற்கு பதிலளிக்கவில்லை.

ரூ.20 ஆயிரம் கோடி யாருக்கு சொந்தம் என்று ராகுல் காந்தி கேட்டிருக்கிறார். அதற்கும் பா.ஜ.க.பதில் சொல்லவில்லை. ஆனால் எங்களைப்போன்ற அப்பாவிகளை சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு மூலம் துன்புறுத்துகின்றனர்.

ராகுல் காந்திக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்தீர்கள். இதற்கு உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம். இது ஜனநாயகத்திற்கான போராட்டம். அதேசமயம் ஒன்றை வெளிப்படையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சாவர்க்கர் எங்களது கடவுள். அதனால் அவருக்கு செய்யப்படும் எந்த அவமரியாதையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது போன்று அவமதிப்பபதை நிறுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.

அதேசமயம் எங்கள் கடவுளை அவமதிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். 14 ஆண்டுகளும் சிறையில் சித்ரவதை அனுபவித்திருக்கிறார். அதனை நம்மால் புத்தகங்களில் மட்டுமே படிக்க முடியும். சாவர்க்கரின் செயல் ஒரு தியாகம். எனவே சாவர்கரை தொடர்ந்து ராகுல் காந்தி அவமதித்து வந்தால், எதிர்க்கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்படும்.

நமது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்பதை ராகுல் காந்திக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நமது ஒற்றுமையை விட்டுவிடாதீர்கள். வேண்டுமென்றே நீங்கள் தூண்டிவிடப்படுகிறீர்கள். நேரம் கடந்து கொண்டிருக்கிறது. இப்போது நாம் செயல்படவில்லையெனில் நமது நாடு சர்வாதிகாரத்தால் ஆட்கொள்ளப்பட்டுவிடும்'' என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி நேற்று டெல்லியில் பேசியது தொடர்பாக சிவசேனாவின் கட்சி பத்திரிக்கையான சாம்னாவிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவிற்குள் வந்த போதும் ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். அப்போதும் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியை எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Tamilnadu News https://ift.tt/H5OCvmX

Post a Comment

0 Comments