Doctor Vikatan: சமீப காலமாக பிரபலமாகி வரும் நட் பட்டர்... சாதாரண வெண்ணெயைவிட ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: சாதாரண வெண்ணெய் பற்றிதான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது சமீப காலமாக நட் பட்டர் என ஒன்று பிரபலமாகி வருகிறதே. அதில் புரதச்சத்து அதிகம் என்பதால் சாதாரண வெண்ணெயைவிட ஆரோக்கியமானது என்கிறார்களே, அது உண்மையா? இந்த நட் பட்டரை தினமும் சேர்த்துக் கொள்ளலாமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

வேர்க்கடலையிலிருந்து எடுக்கப்படும் பீநட் பட்டர், பாதாமிலிருந்து எடுக்கப்படும் ஆல்மண்ட் பட்டர், வால்நட்டிலிருந்து எடுக்கப்படும் வால்நட் பட்டர், முந்திரியிலிருந்து எடுக்கப்படும் கேஷ்யூ பட்டர், ரோஸ்ட்டடு பீநட் பட்டர், உப்பு சேர்க்காத அன்சால்ட்டடு பட்டர்..... இப்படி இன்று விதம்விதமான நட் பட்டர் வகைகள் கிடைக்கின்றன.

இவற்றில் புரதச்சத்து அதிகம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வகை நட் பட்டரையெல்லாம் பிரெட், சப்பாத்தி போன்றவற்றில் தடவி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆனால் ஒரு டேபிள்ஸ்பூன் நட் பட்டரில் 16 கிராம் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும்.

இந்த வகை பட்டரில் சர்க்கரையும், சோடியமும் அதிகம் சேர்த்துத் தயாரிக்கப்படும். ஒரு சர்விங் எனப்படும் 15 கிராம் பட்டரில் 100 மில்லிகிராம் சோடியம் இருப்பதாகத் தெரிகிறது.

ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைவரும் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குழந்தைகள் உட்பட யாருமே சோடியம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எனவே புரதத் தேவைக்காக மட்டும் இந்த நட் பட்டர் வகைகளைப் பயன்படுத்துவது சரியல்ல. கொழுப்பும் சர்க்கரைச் சத்தும் மறைமுகமாக உடலில் சேர்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதுதான் உண்மை.

Peanut butter

எனவே நட் பட்டரையும் அளவோடு சேர்த்துக்கொள்ளும்போது பாதிப்பில்லை. தினமும் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும். வாரத்துக்கு எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்ளலாம் என்பது ஒருவரது உடல் எடை, அவர்களது உடலுழைப்பு, உடற்பயிற்சி செய்பவரா என்பதையெல்லாம் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/x6GthNL

Post a Comment

0 Comments