நெல்லை: இன்னொரு ’இடிந்தகரை’ போல மாறும் கூடுதாழை கிராமம்! - தூண்டில் வளைவுக்காக தொடரும் போராட்டம்

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கூடுதாழை மீனவ கிராமம் உள்ளது. பாரம்பர்ய மீன்பிடித் தொழிலை நம்பியே வாழும் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்துக்கும் கடலுக்கும் இடையே பெரிய மணல் குன்று உள்ளது. ஆனால், கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருப்பதால் கடல் நீர் பல அடி தூரத்துக்கு உள்ளே வந்துவிட்டது. அதனால் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

கூடுதாழை கிராமத்தில் கடல் அரிப்பு

கடல் அரிப்பைத் தடுக்கு தூண்டில் வளைவு வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை. ஆனால் இது வரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடல் நீர் ஊருக்குள் புகும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. எனவே உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கூடுதாழை கிராம மக்கள் கடந்த 11-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூடுதாழை கிராம மக்களுக்கு ஆதரவாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பாரம்பர்ய மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அதனால் 7000 நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதைத் தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷப் ஐ.ஏ.எஸ் நேரில் ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தங்களின் கோரிக்கை குறித்து அரசு உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாக மக்கள் தெரிவித்து விட்டனர்.

சப் கலெக்டர் ரிஷப் நேரில் ஆய்வு

அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் இறங்கி பெண்கள் கோஷமிடுவது, பந்தல் அமைத்து உண்ணாவிர போராட்டம் நடத்துவது, ஆட்சியரிடம் மனு அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தொகுதியின் எம்.எல்.ஏ-வும் சட்டப் பேரவைத் தலைவருமான அப்பாவு கூடுதாழை கிராமத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் பொதுமக்கள், இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல தற்போது கூடுதாழை கிராமத்தில் பந்தல் அமைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். பல்வேறு சமூக அமைப்பினரும் போராடும் மக்களைச் சந்தித்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.

கடலுக்குள் இறங்கி போராட்டம்

கூடுதாழையில் நேற்று 13-வது நாள் போராட்டம் நடந்தது. இது குறித்து போராட்டக் குழுவின் தலைவர் ரொசிங்டன், போராட்டக் குழுவைச் சேர்ந்த வெலிங்டன் டக்ளஸ், சகாய இனிதா, கிங்ஸ் ஆகியோர் பேசுகையில், “கூடுதாழை கிராமத்தில் தூண்டில் வளைவு வேண்டும் எனபது நீண்ட கால கோரிக்கை. அதை அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாததின் விளைவாக எங்கள் குடியிருப்புகள் கடலுக்குள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடலருகே இருந்த சாலை, மின் கம்பங்கள் சரிந்து விட்டன. அந்த இடங்கள் இப்போது கடலுக்குள் சென்றுவிட்டது. கடந்த 10 நாளில் கடல் நீர் 13 அடி உள்ளே வந்துவிட்டது. இதே வேகத்தில் கடலரிப்பு இருந்தால் அடுத்த சில நாள்களிலேயே எங்கள் வீடுகள் அனைத்தும் கடலுக்குள் போய்விடும். கடலரிப்பு காரணமாகப் படகுகளை கடலோரத்தில் நிறுத்த முடியவில்லை. அத்துடன், தொழிலுக்காக படகுகளை கடலுக்குள் கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது.

போராடும் கூடுதாழை மக்கள்

தூண்டில் வளைவு அமைத்துக் கொடுப்பதாக அரசு அறிவித்தால் மட்டுமே எங்களின் போராட்டத்தை நிறுத்துவோம். அதுவரை எங்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். தூண்டில் வளைவுக்குப் பதிலாக தடுப்புச் சுவர் அமைத்துக் கொடுப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் தடுப்புச் சுவர் அமைத்தால் வேகமாக வரும் அலைகள் அதில் பட்டு திரும்பி வரும்போது நாட்டுப் படகுகளைக் கவிழ்த்து உயிரிழப்புக்கு வழிசெய்து விடும். அதனால் தூண்டில் வளைவு அமைப்பது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். அது கிடைக்கும் வரை போராடுவோம்” என்றார்கள்.



from Tamilnadu News https://ift.tt/YBrCMRO

Post a Comment

0 Comments