சீனாவை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஜாக் மா `அலிபாபா' என்ற நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 1999-ம் ஆண்டு அந்நாட்டில் இருக்கும் ஹங்சூ பகுதியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்நாள்களில் உலகில் இருக்கும் முக்கிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
தனது சந்தையை விரிவு படுத்திய நாடுகளில் எல்லாம் வெற்றி கண்டது. மேலும் அவர் பொதுவெளியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் வழக்கம். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் முறையாக மூன்று மாதங்களுக்கு பொது வெளியில் காணப்படவில்லை.
அப்போது சீன அரசு தான் அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு அப்போது ஜாக் மா, "சீனாவில் இருக்கும் ஒழுங்குமுறை அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். வேகமாக வளர பல சீர்திருத்தங்கள் சீனாவுக்குத் தேவை. சீன வங்கிகள் அடகுக்கடை மனநிலையுடன் செயல்படுகிறது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஜாக் மாவுக்கும் சீன அரசுக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டது. எனவே தான் அவர் வெளியில் வராததற்கு அந்த நாட்டு அரசு தான் காரணம் என்று பேசப்பட்டது. பிறகு 2021-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காணொளி வாயிலாக கலந்து கொண்டார். ஆனால் அப்போதும் அவர் எங்கிருந்து கலந்து கொண்டார் என்று தெரியவில்லை.
பிறகு மீண்டும் மாயமானார். நீண்டகாலமாக அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. பிறகு ஸ்பெயின், நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அவர் வசித்து வருவதாக தகவல் வெளியானது.
கடந்த நவம்பரில் செய்தி வெளியிட்ட சில சர்வதேச ஊடகங்கள், "ஜப்பானில் இருக்கும் டோக்கியோ பகுதியில் ஜாக் மா கடந்த 6 மாதங்களாக வசித்து வருகிறார்" என தெரிவித்தன. இந்நிலையில் தான் மீண்டும் சீனாவுக்கு திரும்பியிருக்கிறார் ஜாக் மா. அந்நாட்டில் ஹாங்சோவில் இருக்கும் பள்ளிக்கு சென்றிருக்கிறார்.
இந்த பள்ளியானது ஜாக் மா மற்றும் பிற அலிபாபா நிறுவனர்களால் கடந்த 2017-ல் நிறுவப்பட்டது. அங்கு அவர், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாட்போட் ChatGPT போன்ற தலைப்புகளைப் பற்றி விவாதித்திருக்கிறார். மேலும் ஒரு நாள் கற்பித்தலுக்குத் திரும்புவேன் என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீன செய்தி வட்டாரங்கள். "ஜாக் மாவின் வருகை அந்த நாட்டில் தனியார் துறைகளில் நிலவும் கவலைகளைத் தணிக்க உதவும். மூன்று வருட கொரோனா தடைகளால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதை மேம்படுத்துவதற்கு தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இதற்கு ஜாக் மா ஆதரவை வழங்குவார். ஆனால் அவர் சீனாவில் எவ்வளவு காலம் தங்க திட்டமிட்டுள்ளார் என்று தெரியவில்லை." என்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய கூட்டாளியான லி கியாங். "ஜாக் மா சீனாவுக்கு திரும்புவது தொழில்முனைவோர் மத்தியில் வணிக நம்பிக்கையை அதிகரிக்க உதவும்" என்றார். இவரது வருகைக்கு பிறகு அலிபாபாவின் பங்குகள் 4%க்கு மேல் உயர்ந்திருக்கிறது.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் தொழில் முனைவோர், "ஜாக் மா வருகையால் வணிகங்களுக்கான சீனாவின் சூழல் மேம்படும். தனியார் துறையை மேம்படுத்துவதற்கான அரசாங்கம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
தனியார் துறையை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் எதுவும் மாறவில்லை என்பது தான் தயக்கத்துக்கு காரணம். மேலும் ஜாக் மா ஏற்கனவே அரசால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது அரசு தான் வென்றது. மேலும் ஜாக் மா அதிகாரத்தை, செல்வத்தை இழந்துவிட்டார். அது அவரிடம் மீண்டும் திரும்பி வரவில்லை" என்றன.
from Tamilnadu News https://ift.tt/bKGQ8gZ
0 Comments