விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. கடந்த 2000-ம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இணையான மூலிகை திரவ எரிபொருளைக் கண்டுபிடித்து அதை விற்பனைக்குக் கொண்டுவந்து சர்ச்சைக்கு உள்ளானவர். இவரது கண்டுபிடிப்பு மோசடி எனப் புகார் எழுந்ததால் இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் ராமர் பிள்ளை மற்றும் அவர் மனைவி உட்பட ஐந்து பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அவரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராமர் பிள்ளை மேல் முறையீடு செய்தார். இந்த விசாரணை கடந்த 23 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதி விசாரணைக்கு வந்தது. இதில், ராமர் பிள்ளைமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி நீதிமன்றம் அவர் உட்பட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ராமர் பிள்ளை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "வழக்கால் முடக்கப்பட்டிருந்த எனது வங்கிக் கணக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எனது கணக்கில் சேமிப்பில் வைத்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாயுடன் கடந்த 23 வருடங்களுக்கான வட்டியும் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொருளாதாரச் சிக்கல் காரணமாக, நீதிமன்றத் தீர்ப்பு வந்த 4 மாதங்களுக்குப் பிறகு விளக்கம் அளிக்கிறேன். அரிச்சந்திரனிடம் உண்மை இருந்ததால் அவருக்கு ராஜ்ஜியம் திரும்பக் கிடைத்ததுபோல, என்னிடம் உண்மை இருந்ததால் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தீர்ப்புக்குப் பிறகு கடந்த 3 மாதங்களாக பெரிய அளவிலான தொழிற்சாலை அமைக்கவும், விற்பனைக்காக அரசிடம் அனுமதி வாங்கும் பணிகளும் நடந்துவருகின்றன. 40 நாள்களுக்குள் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படும். உற்பத்தி மதிப்பிலிருந்து 200 மடங்கு விலை வைத்து வாங்க நிறுவனங்கள் தயாராக உள்ளன. அடுத்த முறை, வியாபாரம் தொடங்கிவிட்டது என்ற அறிவிப்பு வெளிவரும். கேரள விஞ்ஞானி நம்பி என்பவர் 30 வருடங்களாகப் போராடினார். நான் 23 வருடங்களாகப் போராடி வெற்றி பெற்றுள்ளேன். விரைவில் 15 ரூபாய்க்குப் புகையில்லாத ஒரு லிட்டர் பெட்ரோலை மக்களுக்கு வழங்குவேன்" என்றார்.
தொடர்ந்து அவருடைய வழக்கறிஞர் சொக்குசாமி பாலசுப்பிரமணியம் பேசுகையில், "காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பதியப்பட்ட வழக்கிலிருந்து அவர் தற்போது விடுதலையாகியுள்ளார். அரசு அதிகாரிகளையும், அறிவியல் விஞ்ஞானிகளையும் குற்றம்சாட்டித் தீர்ப்பு வந்திருப்பதால் இந்தத் தீர்ப்பு குறித்த முழுமையான தகவலை வெளியிடாமல் அரசு அதிகாரிகள் முடக்கிவிட்டனர்" எனத் தெரிவித்தார்.
from Latest news https://ift.tt/F2cfWB8
0 Comments