சிலைகளுக்கு மாலை, ரகசிய சுற்றறிக்கை, பனையூர் சந்திப்பு: அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறாரா நடிகர் விஜய்?

என் நெஞ்சில் குடியிருக்கும் `தொண்டர்களுக்கு...'

`தமிழ்நாடு அரசியலும் சினிமா துறையும் பிரிக்கமுடியாத அங்கமாகி அரைநூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், கமல் என நடிகர்களாக இருந்தவர்கள் அரசியல் புகுந்து தலைவர்களாக தடம்பதிக்கும் போக்கு நடைமுறையாகிவிட்டது. அந்தவரிசையில் சினிமாத்துறையின் அடுத்த அரசியல் வாரிசாக களமிறங்கத் தயாராகிவிட்டார் நடிகர் விஜய். அவரின் சமீபத்திய செயல்பாடுகள் பலவும் அவரின் அரசியல் வருகையை தொடர்ந்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன'

விஜய்

மக்கள் நலத்திட்டங்கள் டு மக்கள் தலைவர்களுக்கு மாலை:

பொதுவாக விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்ததான முகாம் நடத்துதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், ஏழைக மக்களுக்கு வேட்டி, சேலை, உணவு வழங்குதல் என சின்னஞ்சிறு உதவிகளை பொதுநலன் கருதி செய்வதுதான் வழக்கமாக இருந்துவந்தது. அதேபோல, தனது படங்களிலும், அதன் இசை வெளியீட்டு விழாக்களிலும் அரசியல் கருத்துக்களை பேச்சளவில் உதிர்ப்பது என்ற அளவுக்கே விஜய்யின் அரசியலும் இருந்தது. அந்தநிலையில்தான், கடந்த 2021-ல் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் அனுமதியுடன் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் பலர் சுயேட்சையாகப் போட்டியிட்டு, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியும் பெற்றனர். அதைத்தொடர்ந்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான இடங்களில் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்றவர்களை நேரில் அழைத்து வாழ்த்து சொன்னதோடு, அவர்களுடன் ஃபோட்டோசூட் செய்து உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். அடுத்தடுத்து, மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தி குழு புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அப்போதே நடிகர் விஜய்க்குள் துளிர்விட்டிருந்த அரசியல் ஆர்வம் வெளியில் மெல்லத் தழைக்கத்தொடங்கிவிட்டதாக அரசியல் விமர்ச்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில், நலத்திட்டங்களைத்தாண்டி அரசியல், கருத்தியல் ரீதியிலான செயல்பாடுகளிலும் தன் ரசிகர்களை ஈடுபடுத்தும் வகையில் அம்பேத்கர், தீரன் சின்னமலை சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். அதனடிப்படையில், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் அவர்கள் பகுதியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு மாலைகள் அணிவித்து கொண்டாடித் தீர்த்திருக்கின்றனர். குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டியில் நடைபெற்ற அம்பேத்கர் விழாவில் அரசியல் கட்சியினருக்கு இணையான ரசிகர் பட்டாளத்துடன் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை

அதேபோல, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி ஈரோட்டிலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் புஸ்ஸி ஆனந்த். அப்போது, `நடிகர் விஜய்யின் உத்தரவின்பேரில்தான் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாகவும், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்பதுகுறித்து விரைவில் விஜய்யே பதிலளிப்பார்' என்றும் தீர்க்கமாகக் கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை

அதைத்தொடர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்துக்குச் சென்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும், ஏப்ரல் 29-ம் தேதி, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவை அனைத்துமே விஜய் உத்தரவின்பேரில் நடைபெற்றதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

தொகுதி வாரியாக விவரங்கள் சேகரிப்பு:

இந்தநிலையில், நடிகர் விஜய், `சட்டமன்றத் தொகுதி வாரியாக அரசியல் விவரங்களை சேகரிக்கச் சொல்லி மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்கேற்ப, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் `தொகுதிவாரி தகவல் சேகரிக்கும் படிவங்களும்' வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.

விஜய் மக்கள் இயக்கம்

அந்த படிவத்தில், தொகுதியின் பெயர், வாக்காளர்களின் எண்ணிக்கை, ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளிட்ட விவரங்களுடன், கடந்த 5 தேர்தல்களில் அந்தத் தொகுதிகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்கள், தொகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்கள், தொகுதியிலுள்ள 10 முக்கியப் பகுதிகள், மொத்தமுள்ள பூத் எண்ணிக்கை, தொகுதியிலுள்ள வார்டுகளின் எண்ணிக்கை, மொத்தம் எத்தனை வார்டுகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என பல முக்கியப்பட்டியலும் இடம்பெற்றிருக்கின்றன. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், பிற அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் சந்தேகத்தையும் கிளப்பியிருக்கின்றன.

விஜய் மக்கள் இயக்கம்

மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொகுதி வாரியாக இந்த விவரங்கள் சேகரிக்கும் பணியை முடிந்தபின்னர், இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ``தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விஜய் மக்கள் இயக்க மன்றங்களுக்கும் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும், கூட்டத்துக்குத் தேவையான தகுந்த இடத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும், அனுப்பப்பட்ட படிவத்தினை தெளிவாகப் பூர்த்திசெய்து தயாராக வைத்திருக்கவேண்டும் எனவும் தங்கள் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த அவர் வரும்போது அவரிடம் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்" என அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தனர்.

விஜய்

பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய்:

இந்தநிலையில், நடிகர் விஜய் 28-04-2023 அன்று பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களின் பசியாற்றும் வகையில் `விலையில்லா விருந்தகம்' நடத்தும் திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய். மேலும், ``இன்னும் நிறைய மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துங்கள். இதுபோன்ற நலத்திட்டங்களை மேற்கொள்ள பண உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்; கொடுப்பதற்கு நான் இருக்கிறேன்; நாம் செய்யக்கூடிய நலத்திட்டங்களையெல்லாம் மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும். மக்களிடம் நம் இயக்கத்தை வலுப்படுத்துங்கள்!" என நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

விஜய்யின் இந்த நடவடிக்கைகள் அரசியல் பயணத்துக்கான அடித்தளமா? அல்லது லியோ பட ரிலீஸுக்கான ஆயத்தமா?! என்பதை காலம் சொல்லும்!



from Latest news https://ift.tt/Ff1l9RG

Post a Comment

0 Comments