300 போலீஸாருக்கு விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய அஸ்ஸாம் முதல்வர்! - ஏன் தெரியுமா?

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் அஸ்ஸாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, 300 போலீஸாருக்கு விருப்ப ஓய்வு (VRS) கொடுத்து வீட்டுக்கு அனுப்பியிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. வரும் மே 10-ம் தேதியோடு அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியமைத்து இரண்டாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நிர்வாகத்தை மாற்றியமைத்து காவல்துறையைச் சீர்படுத்த இத்தகைய நடவடிக்கையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

போலீஸ்

முன்னதாக கடந்த வியாழனன்று காவல்துறை மூத்த அதிகாரிகளுடனும், எஸ்.பி-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, அதிக குடிப்பழக்கமுடையவர்கள், அதிக உடல்பருமன் கொண்டவர்கள், ஊழல் வழக்குகளை எதிர்கொள்பவர்கள் ஆகியோருக்கு வி.ஆர்.எஸ் அல்லது சி.ஆர்.எஸ் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், போலீஸார் உடற்தகுதிப் பயிற்சியில் ஈடுபடுகிறார்களா, காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு பதிவுசெய்து நியாயமான முறையில் அவற்றை முடிவுக்குக் கொண்டுவருகிறார்களா என்பதைப் பார்க்க டி.ஜி.பி மற்றும் பிற உயரதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அதிரடியாக அதிக குடிப்பழக்கம்கொண்ட 300 போலீஸாருக்கு வி.ஆர்.எஸ் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, ``300 போலீஸாரும் அதிக அளவு குடிப்பழக்கம்கொண்டவர்கள். அதிக அளவு குடிப்பழக்கத்தால் இவர்களின் உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, விருப்ப ஓய்வு வழங்கப்பட்ட போலீஸாருக்கு முழுச் சம்பளம் அளிக்கப்படும்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

இது போன்ற விருப்ப ஓய்வு மற்ற இடங்களில் நடைமுறையில் இருந்தாலும், அஸ்ஸாமில் இதுவே முதன்முறை. மேலும் இது ஒரு பழைய விதி. முன்பு நாங்கள் இதைச் செயல்படுத்தவில்லை. இப்போது புதிதாக ஆள்சேர்க்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம்" என்று கூறியிருக்கிறார்.



from Latest news https://ift.tt/7tejp6W

Post a Comment

0 Comments