ராமநாதபுரம் புளிக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (60). இவர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மல்லம்மாள் காளி கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவரின் மூத்த மகளுக்கு அடுத்த மாதம் 7-ம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. மகளின் திருமணத்துக்குத் தேவையான நகைகளை வீட்டின் பீரோவில் வைத்திருந்திருக்கிறார் மனோகரன். இந்த நிலையில், மனோகரன் கோயிலில் பூஜைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவரின் மனைவி, மகளின் திருமண பத்திரிகை கொடுப்பதற்காகச் சென்றிருந்திருக்கிறார். வீட்டிலிருந்த உறவினர்களும் திருமண விழாவுக்குத் துணி எடுப்பதற்காக மணமகளுடன் ஜவுளி கடைக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கின்றனர். பின்னர் பீரோவை உடைத்து, மனோகரன் தன்னுடைய மகளின் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த 23.5 பவுன் தங்க நகைகள், ஒரு வைர மூக்குத்தி, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
பூஜை முடிந்து இரவு 9 மணி அளவில் வீட்டுக்குச் சென்ற மனோகரன், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த கேணிக்கரை போலீஸார், கொள்ளை நடந்த வீட்துக்குள் சென்று ஆய்வுசெய்தனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகை தடயங்களை பதிவுசெய்தனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருமணத்துக்காக வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தனிப்படை அமைத்துக் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
from Latest news https://ift.tt/DFoSwJt
0 Comments