பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க
``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களே குட்கா விவகாரத்தில் சிக்கி, அந்த வழக்கு இன்றுவரை நிலுவையிலிருக்கிறது. அதுமட்டுமன்றி போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவேண்டிய டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளே போதைப்பொருள் விற்பனைக்கு உறுதுணையாக இருந்ததற்காக இன்னமும் நீதிமன்றப் படியேறிக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க இப்படியென்றால், அவர்களுடன் கூட்டணியிலிருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, விமான நிலையங்கள் தொடங்கி துறைமுகங்கள் வரைக்கும் தனியாருக்குத் தாரை வார்த்ததன் மூலம், அவற்றையெல்லாம் தடையில்லாமல் போதைப்பொருளைக் கொண்டுவருவதற்கான நுழைவாயில்களாக்கிவிட்டது. தனியார் வசமிருக்கும் அந்தத் துறைமுகங்களில் எத்தனை ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் பிடிபடுகின்றன என்பதை நாம் தினமும் செய்திகளில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்... அ.தி.மு.க ஆட்சியில் போதைப்பொருள் கும்பல்கள் தமிழ்நாடு முழுக்க வேரூன்றி, கிளை பரப்பி பெருமரமாகிவிட்டன. அந்த மரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எறியும் வேலையைத் தளபதி ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். கஞ்சா வேட்டை 1.0 ஆரம்பித்து, 4.0 என்று வெற்றிகரமாக கஞ்சா ஒழிப்பைச் செய்துவருகிறது காவல்துறை. தமிழகமெங்கும் கஞ்சா மட்டுமல்லாமல் அனைத்து வகையான போதைப்பொருள் விற்பனையும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க வளர்த்துவிட்டுச் சென்ற போதை எனும் பெருமரத்தை எங்கள் தளபதி வேருடன் பிடுங்கி எறிவார்.’’
செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க
``தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அ.தி.மு.க ஆட்சியையே கைகாட்டிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம் என்பதால் அதை திசைதிருப்பவே இப்படியெல்லாம் பேசுகிறார்கள். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முழுவதும் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், திரும்பும் திசையெங்கும் கள்ளச்சாராயமும், கஞ்சா புழக்கமும்தான் அதிகரித்திருக்கின்றன. ‘கஞ்சா வேட்டை’ என்கிற பெயரில் வெறும் கண்துடைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா... அ.தி.மு.க ஆட்சியில் கஞ்சா விற்பனை முதல் கள்ளச்சாராய விற்பனை வரை அனைத்தையும் காவல்துறை முற்றிலுமாக ஒடுக்கியிருந்தது. இந்த விடியாத தி.மு.க ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், மீதமிருக்கும் காலத்துக்குள் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களைச் சந்திக்கப்போகிறார்களோ தெரியவில்லை. ‘அரசியல் பின்புலம்கொண்டவர்களே அதிகாரத்தைப் பயன்படுத்தி கள்ளச்சாராய விற்பனையிலும், போலி மதுபான விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள்’ என்று எடப்பாடியார் சொன்ன குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மை என்பதால், முதல்வர் ஸ்டாலின் தார்மிகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!’’
from Tamilnadu News https://ift.tt/Ol23zoY
0 Comments