"இந்த அரசு ஒரு பித்தலாட்ட அரசு; ஸ்டாலின், ஆள தெரியாத முதல்வர்" - சி.வி.சண்முகம் காட்டம்

விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 22 பேர் பலியாகியிருக்கிறார்கள். அந்த சம்பவத்தை இந்த அரசு திசை திருப்ப பார்க்கிறது. கள்ளச்சாராயத்திற்கு, அதிசயமான ஒரு விளக்கத்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு கொடுத்திருக்கிறார். இது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்று சொல்லியிருக்கிறார். கள்ளச்சாராயம் என்றால் என்ன? விஷச்சாராயம் என்றால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

உயிர் குடித்த கள்ளச்சாராயம்

பால்டாயில் குடித்து செத்தால் என்ன? அரளிவிதை அரைத்து குடித்து செத்தால் என்ன? விஷம் விஷம்தான். இதை இரண்டாம் புலிகேசி போல கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஸ்டாலின் அரசாங்கத்தில். சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டியது யாருடைய கடமை. இன்று தமிழகத்தின் முதலமைச்சர் யார்... பொன்முடி, மஸ்தான் அவர்களே. சட்ட விரோதமாக சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அதிமுக-வின் கோரிக்கை. அது அதிமுக-வினர் என்றாலும் சரி, எந்த கட்சியினராக இருந்தாலும் சரி நடவடிக்கை எடுங்கள். 

விழுப்புரம் மாவட்டத்தில் எக்கியார்குப்பம் மட்டுமின்றி, மீண்டும் மூன்று இடங்களில் 3 பேர் விஷச்சாராயத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் நடந்ததும் 2000 பேரை கைது செய்தீர்களே... அப்படியென்றால், அவர்கள் எங்கு சாராயம் விற்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கிறது. கூலிக்கு சாராயம் விற்பவர்களை தான் இவர்கள் கைது செய்திருக்கிறார்கள். கள்ளச்சாராயத்தையும், டி.ஜி.பி சொல்வது போல் விஷச்சாராயத்தையும் தயாரித்து பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்த அந்த மொத்த வியாபாரி யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? 

சி.வி.சண்முகம் - செஞ்சி மஸ்தான்

திண்டிவனத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர், தி.மு.க கவுன்சிலரின் கணவர். புதுச்சேரியில் கைது செய்யப்பட்டதில் ஒருவர் தி.மு.க-வை சேர்ந்தவர். திண்டிவனத்தில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரி மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவிக்கு கவுன்சிலர் சீட்டு கொடுத்தது ஸ்டாலின் என நான் சொல்ல மாட்டேன். ஏனெனில், அவருக்கு இது தெரிந்திருக்காது. சாராய வியாபாரி என்பது தெரிந்தும், ஆதாயத்திற்காக சீட் கொடுத்தது இந்த மாவட்டத்தின் மந்திரியாக இருக்கிற செஞ்சி மஸ்தான் தான். இந்த இரண்டாண்டு காலத்தில், அந்த சாராய வியாபாரியால் (மரூர் ராஜா) சாராய சாம்ராஜ்யம் திண்டிவனம், மரக்காணம், புதுவை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை தாண்டி விரிவடைந்திருக்கிறது. மிகப்பெரிய சாராய வியாபாரியை உருவாக்கி கொடுத்தது யார்? அவர் மீது (மஸ்தான்) என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது இந்த தி.மு.க. 

ஸ்டாலின் ஒரு ஆள தெரியாத முதல்வர் என்பதை இந்த கள்ளச்சாராய சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில், இரு சமூகத்திற்கு இடையிலான திரௌபதி அம்மன் கோயில் பிரச்னை நடந்து, இரண்டு மாதங்கள் ஆனபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்காத அமைச்சர் பொன்முடி... இந்த கள்ளச்சாராய விவகாரத்தினால் அரசுக்கு ஏற்பட்ட விமர்சனங்களை எல்லாம் மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்க பார்க்கிறார். இது உண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய சம்பவம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசே ஒரு நாடக அரசு. முதலமைச்சரே ஒரு நாடக நடிகர், பொம்மை. அறிவிப்புகள் எல்லாம் வெத்து அறிவிப்புகள். அவர்கள் எந்தத் தொடர் நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

மு.க.ஸ்டாலின், சி.வி.சண்முகம்

22 பேர் மரணமடைந்த பின்பும் இந்த அரசு இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. அதிகாரிகளும், காவல்துறையினரும் தவறான தகவல்களை இந்த அரசுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எக்கியார் குப்பம் கிராம மக்கள் இன்று வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஒரு வார காலமாக கடலுக்குச் செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அந்த மக்களை  இந்த மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை, முதலமைச்சர் ஸ்டாலினும் கண்டு கொள்ளவில்லை. ஏதோ 10 லட்சம் கொடுத்துவிட்டால் தன் கடமை முடிந்தது என்று போய்விட்டார்கள். இந்த அரசு ஒரு பித்தலாட்ட அரசு, ஏமாற்று அரசு. எப்படி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சி செய்கிறார்களோ, அதேபோன்று மக்கள் பாதிக்கப்படுகின்ற சம்பவங்களை தீர்க்காமல்... அதை திசை திருப்பிக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்கள் திங்கள்கிழமை காலையில் பெரிய பேரணியாக சென்று ஆளுநரை சந்திக்க இருக்கிறார். 

சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிச்சாமி

நீட் தேர்வு விலக்கு என்பது இந்த ஸ்டாலின் அரசினுடைய மோசடியான ஒரு வாக்குறுதி. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு நீட் தேர்வை நீக்குவோம் என்றார்கள். ஆனால் அவர்களுடைய ஆட்சி, இரண்டு ஆண்டு காலம் முடிந்து இப்போது மூன்றாவது ஆண்டு தொடங்கிவிட்டது. ஸ்டாலினின் குடும்பமே ஒரு பித்தலாட்ட குடும்பம், மோசடி குடும்பம்." என்றார் காட்டமாக.



from Tamilnadu News https://ift.tt/fl8i75G

Post a Comment

0 Comments