இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும், குறைந்தக் கட்டணத்தில் மக்களுக்கு நிறைவான சுற்றுலா சேவையை வழங்கவும் ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி.சார்பில் 'பாரத் கௌரவ்' சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. கேரளா மாநிலம் கொச்சுவேளியிலிருந்து புறப்பட்டு கொல்லம், தென் தமிழகத்தின் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக வட மாநிலங்களில் உள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு கவர்ச்சிகரமான சுற்றுலா சேவைகளை வழங்கி வருகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி-யின் 'பாரத் கௌரவ்' ரெயில்சேவை அறிவிப்பு, வடமாநில கோயில்களுக்கு புனித யாத்திரை செல்ல நினைக்கும் தமிழக தென்மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி, பூரி-கொனாரக்-கொல்கத்தா-கயா-வாரணாசி-அயோத்தியா-அலகாபாத் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள முக்கியச் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் 'புன்ய தீர்த்த யாத்திரை' பெயரில் புதிய சுற்றுலாத்திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. சமீபத்தில் அறிவித்தது.
12நாள் சுற்றுலாத்திட்டமான இந்த அறிவிப்பில், பயணிகளுக்கு ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏ.சி.பெட்டிகள், சாதாரண மற்றும் குளிர்சாதன வசதிக்கொண்ட தங்கும் அறைகள், உள்ளூரை பார்வையிடுவதற்கான போக்குவரத்து வசதி, தென்னிந்திய உணவு வகைகள், சுற்றுலா மேலாளர் மற்றும் தனிபாதுகாவலர் வசதி ஆகிய சிறப்பம்சங்களை உள்ளடக்கி சுற்றுலா சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்தது.
இந்த சுற்றுலாவுக்கான முன்பதிவின்படி, 3ம்வகுப்பு ஏ.சி.வசதி படுக்கைக்கு பெரியவர் என்றால் நபர் ஒருவருக்கு 35,651 ரூபாயும், சிறியவருக்கு 33,761 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், சாதாரண ஸ்லீப்பர் வகுப்பில் பெரியவருக்கு 20,367 ரூபாயும், சிறியவருக்கு 19028 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது.
பயணத்திட்டத்தின்படி கடந்த மே 4-ந் தேதி புறப்பட்ட 'பாரத் கௌரவ்' சுற்றுலா சேவை சிறப்பு ரயில் மே 15-ந்தேதி சுற்றுலாவை நிறைவு செய்தது. கேரளா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் புனித யாத்திரை கனவை நனவாக்கும்படியான இந்த சுற்றுலா மீது சேவைக்குறைபாடு தொடர்பான விமர்சனங்கள் வலுத்து வருகிறது.
அதன்படி 'பாரத் கௌரவ்' ரயில் மூலமாக புனித யாத்திரை சென்ற பயணி பூபதி நம்மிடம் பேசுகையில், "பாரத் கௌரவ் ரயிலில், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் மட்டும்தான் போர்டிங் நபர்கள். பயணத்திட்டத்தின்படி, சென்னை வரைக்கும் மட்டும்தான் சுற்றுலாவுக்காக போர்டிங் செய்ய முடியும். சென்னையை கடந்ததும் குறிப்பிட்டப்படி அந்தந்த டூரிஸ்ட் இடங்களில் மட்டுமே ரெயில் நிற்கும். எனவே இந்த பயணத்தில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக டூரிஸ்ட் கைடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் கைடுகள் யாருக்கும் தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. ஹிந்தி மட்டும் பேச தெரிந்தது. எங்களில் பலருக்கும் ஹிந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆகவே, சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை கைடுகள் ஹிந்தியில் பேசவும் புரிகிறதோ, புரியவில்லையோ தலையாட்டிவிட்டு அடுத்த இடத்துக்கு நகர்ந்து சென்றுவிட்டோம். ஆகவே மொழி பிரச்சினை எங்களுக்கு முதல் பிரச்சினை.
பயணத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தென்னிந்திய உணவுகள் பறிமாறப்பட்டது. மற்ற அனைத்து நாட்களிலும் சப்பாத்தி, உப்புமா போன்ற வட இந்திய உணவு மெனுக்கள் தான்.
சுற்றுலா சென்ற அனைவருமே ஓய்வூதியர்கள், வயதானோர்கள் மற்றும் ஏதோ ஒரு பிரச்சினைக்காக தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள். அப்படியிருக்கையில் எல்லா நேரங்களிலும் அவர்கள் கொடுத்த சப்பாத்தி, உப்புமா எங்களில் நிறைய பேரின் உடலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. மாற்றாக, நாங்கள் தென்னிந்திய உணவு ஹோட்டல்களை தேடிச்சென்று சொந்தசெலவில் தான் சாப்பிட்டோம். முன்பதிவின்போது லோக்கல் டிரான்ஸ்போர்ட்டும் உள்ளடக்கம் என்றுச்சொல்லித்தான் கட்டணம் வசூலித்தார்கள்.
ஆனால், வடமாநில ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்டதோடு சரி. எல்லோரும் இந்த முகவரியில் சென்று தங்கிக்கொள்ளுங்கள் என்று அறிவிப்பு மட்டும் தந்துவிட்டு மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் சென்றுவிட்டார்கள். தொடர்ந்து முன்பின் தெரியாத அந்த ஊரில் அந்தநேரத்தில் நாங்கள் எங்குச்சென்று யாரைக்கேட்டு தங்கும் அறைகளுக்கு சரியாக சென்று சேர்வோம் என்ற அக்கறை துளியும் அவர்களுக்கு இல்லை.
எனவே, வாக்குறுதி அளித்தப்படி எங்களை அழைத்து செல்வதற்கு எந்தவொரு லோக்கல் போக்குவரத்து ஏற்பாடும் அவர்கள் செய்யவில்லை. ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்தும் நாங்கள் தங்கவைக்கப்பட்ட இடம் சுமார் 2 கி.மீ. தூரத்தில் இருந்தது. அந்த ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்களின் சொந்த செலவிலேயே ஆட்டோ, ரிக்ஷாக்களில் சென்று வந்தோம்.
அதுபோல, ஏ.சி.பெட்டி முன்பதிவு செய்தவர்களுக்கு லோக்கல் டிரான்ஸ்போர்ட்டும், தங்கும் அறையும் ஏ.சி-யில்தான் வழங்கப்படும் என்றார்கள். ஆனால் அதுவும் சொன்னப்படி வழங்கப்படவில்லை. திட்டப்படி கொல்கத்தாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒருசிலவை விடுமுறை காரணமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் வெறுமனே, வெளியே நின்று வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பினோம். ரயில் தாமதம், அதனால் ஏற்பட்ட அவசரம் காரணமாக அநேக இடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அவசர, அவசரமாக காண்பிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டோம். மொத்தத்தில் இவ்வளவு பணம் கொடுத்தும் எங்களுக்கு இந்தப்பயணம் திருப்திகரமாக அமையவில்லை என்பதுதான் வருத்தம்" என்றார்.
ரயில் பயணிகள் அசோசியேஷன் சார்பில் ஜெகன்நாதன் ராஜா பேசுகையில், "பாரத் கௌரவ் ரயில் சுற்றுலா திட்டத்துக்காக நாங்கள் பெரும் முயற்சி எடுத்து விளம்பரம் செய்தோம். அதன்பயனாக ராஜபாளையத்தில் மட்டும் மொத்த புக்கிங்காக 150-க்கும் மேற்பட்ட நபர்கள் சுற்றுலா சென்றார்கள். தென் மாவட்டங்களிலேயே மொத்த புக்கிங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் முதலில் போர்டிங் செய்தது ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தான்.
இந்த பெருமை குலைந்திடும் வகையில் புன்ய தீர்த்த யாத்திரை பயணம் அமைந்ததாக பயணிகள் கருத்து தெரிவிப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ராஜபாளையம் மட்டுமல்லாது சிவகாசி, செங்கோட்டை, தென்காசி, விருதுநகர் உள்பட மாவட்டத்தின் மற்ற போர்டிங் பகுதிகளில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்கள் வருகிறது. 'புன்ய தீர்த்த யாத்திரை'-யை தொடர்ந்து பாரத் கௌரவ் ரயில் மூலம் 'ஷீரடி சாய் தர்சன்' பெயரில் அடுத்தக்கட்ட சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது அறிவித்துள்ளது. 8 நாட்கள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த சுற்றுலாவுக்கு 13,950 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், முந்தைய சுற்றுலாவுக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களால் தற்போது, 'ஷீரடி தர்சன்' திட்டத்துக்கான முன்பதிவு ஒன்றிரண்டாக குறைந்துவிட்டது. எனவே, ரயில்வே நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்து பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் சரியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இது ரயில்வே நிர்வாக வருவாயைத்தான் பாதிக்கும்" என்றார்.
from Tamilnadu News https://ift.tt/7lCWoFk
0 Comments