கேரளா: மீண்டும் தீப்பிடித்து எரிந்த அதே ரயில் - விபத்தா... நாசவேலையா... விசாரணையில் என்.ஐ.ஏ!

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் கண்ணூர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் இன்று அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டியதால் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரயிலின் பின் புறம் உள்ள ஜெனரல் கம்பார்ட்மெண்ட் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. நள்ளிரவு 1.30 மணியளவில் தீ எரிவதை பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கேரளா ரயில் எரிப்பில் கைதான ஷாருக் ஷைஃபி

தீ எரிந்த பெட்டியின் அருகில் இருந்த பெட்டிகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதால் மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. அதே சமயம் தீ அணைப்பதற்குள் அந்த பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது.

கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி வந்த இதே எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடைபெற்றது. எலத்தூர் ரயில் நிலையத்தில் நடந்த அந்த சம்பவத்தில் டெல்லியைச் சேர்ந்த ஷாருக் ஷைஃபி என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதே ரயிலில் மீண்டும் திடீரென தீப்பிடித்து எரிந்ததன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தீபிடித்து எரிந்த ரயில் பெட்டி

இதைத்தொடர்ந்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தபோது தீ எரிந்த கோச் அருகே ஒரு நபர் சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீஸ் மட்டுமல்லாது என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகளும் விசாராணையில் குதித்துள்ளன. என்.ஐ.ஏ இந்த தீ விபத்து தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.



from Latest news https://ift.tt/82KD0s9

Post a Comment

0 Comments