கரூரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களிலும், அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் கடந்த 26-ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறையினரின் சோதனை, ஏழாவது நாளாக இன்றும் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், மாயனூர் அருகேயுள்ள எழுதியாம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்குச் சொந்தமான, 'சங்கர் ஃபார்ம்ஸ்' என்ற பெயரிலான பண்ணை வீட்டில் வருமான வரித்துறை சோதனையை இன்று அதிகாரிகள் தொடங்கினர். இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகளுக்கு, துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் அமைந்திருக்கும் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்குச் சொந்தமான அலுவலகத்தில், பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் உள்ளே சென்று சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அவரது அலுவலகத்தில் கணக்காளராக வேலைப் பார்த்துவந்த, வடக்கு காந்தி கிராமம் பகுதியைச் சேர்ந்த ஷோபனா என்பவரது வீட்டில் கடந்த ஆறு நாள்களாக நடைபெற்று வந்த சோதனை, நேற்று இரவோடு முடிவுக்கு வந்தது. அந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டிலும், வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நீண்டிருப்பது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news https://ift.tt/3XareE8
0 Comments