போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்கள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகளாகத்தான் இருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த தம்பதி அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்துகொண்டு கூரியர் மூலம் போதைப்பொருளை நாடு முழுவதும் அனுப்பி விற்பனை செய்துவந்திருக்கின்றனர். கடந்த வாரம் மத்தியப் பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்தில் மும்பை மீரா ரோடு பகுதியைச் சேர்ந்த நிஷார் கான் (39) என்பவர் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஒரு போதைப்பொருளுடன் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அதை மும்பையைச் சேர்ந்த அசிஷ் குமாரும், அவரின் மனைவி சிவானியும் சேர்ந்து கொடுத்தனுப்பியதாகத் தெரிவித்தார். அசிஷ் தம்பதி மும்பை கோரேகாவ் பகுதியிலுள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கின்றனர்.
நிஷார் கானிடம் விசாரணை நடத்தியதில் அசிஷ் குமார் தம்பதியிடம் தான் கூரியர் பாயாக வேலை செய்துவந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில், ``கடந்த 6-ம் தேதி என்னிடம் ஒரு பார்சலை கொடுத்து இதை மத்தியப் பிரதேசத்திலுள்ள சந்தேரி என்ற இடத்தில் டெலிவரி செய்துவிட்டு வரும்படி கூறினர்.

அதோடு சேர்த்து புதிய மொபைல் போன், சிம் கார்டும் கொடுத்தனர். பார்சலை டெலிவரி செய்தவுடன் போன், சிம்கார்டு ஆகிய இரண்டையும் குப்பையில் போட்டுவிட வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருந்தனர். ஒவ்வொரு முறையும் டெலிவரிக்கு அனுப்பும்போது புதிய போன் மற்றும் சிம்கார்டு கொடுத்து அனுப்புவது வழக்கம்.
வேலை முடிந்தவுடன் குப்பையில் போட்டுவிட வேண்டும் என்று சொல்வார்கள். நானும் அப்படியே செய்துவிடுவேன். அவர்கள் கொடுக்கும் பார்சலில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது'' என்று தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில் மத்தியப் பிரதேச போலீஸார் மும்பை வந்து உள்ளூர் போலீஸாரின் துணையோடு கோரேகாவில் தங்கியிருக்கும் அசிஷ் குமார் தம்பதியைச் சந்தித்து விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துவிட்டு வந்தனர். அவர்கள் சம்மன் கொடுத்துவிட்டுச் சென்றவுடன் அசிஷ் குமார் தம்பதி தங்களது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.96 லட்சத்தைப் பல்வேறு வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
போலீஸார், அசிஷ் குமார் தம்பதி தப்பித்துச் செல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அவர்கள் போலீஸாரிடம் கொடுத்திருந்த மொபைல் நம்பர் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வுசெய்தபோது அதில் 300 கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
கடைசியாக ரூ.96 லட்சத்தை எடுத்த பிறகும் அவர்களின் வங்கிக் கணக்கில் 126 கோடி ரூபாய் இருந்தது. இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர், ``அசிஷ் தம்பதி நீண்ட நாள்களாக வீட்டில் இருந்துகொண்டு கூரியர் பாயைப் பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரம் செய்துவந்திருக்கின்றனர். கூரியர் கம்பெனியில் கொடுத்தால் சிக்கல் வரும் என்று கருதி சொந்தமாக ஒரு கூரியர் பாயை வேலைக்கு வைத்திருக்கின்றனர். அவர்கள் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து வேறு வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பியிருக்கின்றனர். யாருக்கெல்லாம் பணம் அனுப்பப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அசிஷ் குமார் தம்பதி வழக்கறிஞர் ஒருவருடன் வந்து போலீஸாரைப் பார்த்துவிட்டு சாட்சியங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

அதன் பிறகு வரவில்லை'' என்று தெரிவித்தார். போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரிடம் போதைப்பொருள் இருந்தால் அல்லது அது தொடர்பான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கைதுசெய்ய முடியும். போதைப்பொருள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் சந்தேகப்படுபவர்களை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க மட்டுமே முடியும். அசிஷ் குமார் தம்பதி போதைப்பொருள் வியாபாரத்தை முழுக்க முழுக்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்தி செய்துவந்திருக்கின்றனர். அவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டிருக்கிறது.
from Latest news https://ift.tt/PYB75nq
0 Comments