மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ட்விட்டரில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை இரவு மதுரை காவல்துறையினர் சென்னையில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை கோரிய வழக்கில் நேற்று மதியம் மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 'சூர்யாவின் பதிவு இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது' என வாதிடப்பட்டது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் வாதிட்டனர்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி டீலாபானு, எஸ்.ஜி.சூர்யாவிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் உத்தரவில், '30 நாள்களுக்கு தினமும் காலை 10 மணிக்கு மதுரை சைபர் கிரைம் போலீஸில் கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர்கள், "சூர்யா மீது திமுக அரசு தொடுத்த பொய் வழக்கில் நீதி கிடைத்துள்ளது' என்றார்கள்.
அப்போது வாகனத்தில் ஏறிய எஸ்.ஜி.சூர்யா, "ஆளும்கட்சிக்கு இருக்கிறது, கிழித்து தொங்கவிடுவேன்' என குரல் எழுப்பியபடி புறப்பட்டார். அதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பானது.
from Latest news https://ift.tt/vfoZFTV
0 Comments