3,343 அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை - அரசு செய்யத் தவறியதும்... செய்ய வேண்டியதும் என்ன?!

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள், பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், நடப்பாண்டில் 5 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான எந்த அறிவிக்கையும் வெளியாகவில்லை. கல்வி சார்ந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவதை பல்வேறு அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் கண்டித்திருக்கின்றனர்.

பள்ளிக் கல்வி இயக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023-ம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும். வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதமும், 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிவிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால், மே மாதம் நிறைவடைந்த நிலையில், ஓர் அறிவிக்கைக் கூட வெளியாகவில்லை. இது குறித்து, ஏப்ரல் 3-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அப்போதைய பொறுப்புத் தலைவர் நந்தகுமார், ``மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படும்'' என்று அறிவித்திருந்தார். ஆனால், நந்தகுமார் மாற்றப்பட்டு, முழு நேரத் தலைவர் நியமிக்கப்பட்ட பிறகும் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இது தேர்வு அறிவிப்புக்காக காத்திருந்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரின்ஸ் கஜேந்திர பாபு

இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம், "அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை வலுப்படுத்துவதில் அரசுக்கு உண்மையான அக்கறை இருக்கிறதா? என்ற கேள்வியே முதலில் எழுகிறது. ஒரு நிறுவனம் சரியாக இயங்க வேண்டும் என்றால் அந்த நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்கள், சரியான எண்ணிக்கையில் இருக்க வேண்டும், ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஒரு நிறுவனத்திற்கே இப்படி என்றால் அரசு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேவையான ஆசிரியர்களை உரிய காலத்தில் நியமித்திருக்க வேண்டாமா?. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் மே மாதம் முடிகிறது என்றால், அதற்கான முன் ஏற்பாடுகளை பிப்ரவரி மாதமே தேர்தல் ஆணையம் தொடங்கி விடுகிறது.

ஜூன் மாதம் ஆசிரியர்கள் தேவை என்றால் அந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அதற்கு ஆகும் காலத்தை கணக்கிட்டு மூன்று மாதமோ, ஆறு மாதமோ அதற்கு முன்பாகவே பணிகளை தொடங்கியிருக்க வேண்டாமா?.

ஜூன் மாதம் வந்தும்கூட இன்னும் அதற்கான ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக நடவடிக்கைகளை தொடங்கவில்லை என்றால், இது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். பள்ளிகள், கல்லூரிகள் ஒரு புறமிருக்க பல்கலைக்கழகங்களிலேயே பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர பேராசிரியர் மட்டுமே இருக்கும் அவல நிலை தமிழகத்தில் இன்னமும் நீடிக்கிறது. ஏழு பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒருவர் மட்டுமே இருப்பது எப்படி சரியாகும்?. பல்கலைக்கழகங்கள் தொடங்கி பள்ளிகள் வரைக்கும் பல ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இப்படி இருந்தால் மாணவர்களின் திறன் மேம்பாடு எவ்வாறு  சாத்தியமாகும். இது மக்களுக்கு தரக்கூடிய உரிமைகளை பறிக்கக்கூடிய நடவடிக்கை. ஒரு நல வாழ்வு அரசு இப்படி செய்யக்கூடாது.

பெருமாள் சாமி - ஆசிரியர்கள் சங்கம்

பதிவு மூப்பு (seniority in register) அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வதா? அல்லது தேர்வு வைத்து ஆசிரியர்களை தேர்வு செய்வதா என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இரண்டு விதமான தேர்வு முறைகளிலும் இருக்கக்கூடிய சாதக, பாதங்களை ஆராய்ந்து அமைச்சரவை முடிவெடுக்க வேண்டியதுதானே. என்னைப் பொருத்தவரையில் ஏற்கெனவே தகுதி பெற்ற ஒரு ஆசிரியருக்கு மீண்டும் தகுதி தேர்வு வைப்பது என்பது ஏற்புடையது அல்ல.

பதிவு மூப்பு அடிப்படையிலேயே ஆசிரியர் தேர்வு அமைய வேண்டும். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் நடந்தது. ஆசிரியர்களுக்கு இது தேவையில்லாத மன உளைச்சலையை ஏற்படுத்துகிறது. உரிய காலத்தில் தங்களுக்கு தேவையான நிதி மசோதாவை மட்டும் தாக்கல் செய்யும் அரசாங்கம். இது போன்ற மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விடுவது நியாயமா? அரசின் அக்கறையின்மையையே இது காட்டுகிறது.

கல்வி என்பது ஒரு அரசியல். கல்வி அறிவை கொடுத்தால் விழிப்புணர்வு இருக்கும், விழிப்புணர்வு இருந்தால் ஜனநாயகம் வலுப்பெறும். கல்வி மறுக்கப்பட்டால் ஜனநாயகம் வலுவிழக்கும். ஜனநாயகம் வலுவிழந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும். சுதந்திரத்தை இழக்க நேரிடும். சுயமரியாதை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திமுக கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வி விஷயத்தில் திமுக அதிமுக இரு கட்சிகளுமே கடந்த காலத்தில் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே கல்வி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாறாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிக்கல்வி, உயர் கல்வி ஆகிய 2 துறைகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகளே முடிவெடுப்பவர்களாக இருக்கின்றனர்.

தேர்வு

அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலே நிர்வாக ரீதியாக பல முடிவுகளை ஐஏஎஸ் அதிகாரிகள் எடுக்கின்றனர். குறைந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை அருகாமையில் உள்ள பள்ளிகளோடு இணைப்பது போன்ற பல எதிர்மறையான முடிவுகள் இவ்வாறு எடுக்கப்பட்டவையே.

கடந்த ஜூலை மாதம் 13,000 ஊழியர்களை தற்காலிகமாக நியமிப்பதாக அரசு அறிவித்தது. எனவே அரசுக்கு 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை என்பது கடந்த ஆண்டு ஜூலை மாதமே தெரியும். பலர் ஓய்வு பெறும் காரணத்தால் இந்த எண்ணிக்கை நிச்சயமாக கூடுதலாக தான் ஆகும் என்பதும் அரசுக்கு தெரியும். எனில் நிரந்தர ஊழியர்களை எடுப்பதற்கான பணியை குறைந்தபட்சம் டிசம்பர் மாதத்தில் ஆவது தொடங்கி இருக்க வேண்டாமா? நிரந்தர ஊழியர்களுக்கு கொடுக்கக்கூடிய அதே பணியை தான் தற்காலிக ஊழியர்களுக்கும் வழங்குகிறார்கள். ஆனால் பட்டதாரி ஆசிரியருக்கு 15,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு 18,000 ரூபாய் மட்டுமே சம்பளம் ஆக வழங்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டிற்கு பிறகு அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படவில்லை. 2013- 14-ம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும்  தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அநீதி இல்லையா? இப்படி ஒரு உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மன அழுத்தத்தில் இருக்க மாட்டார்களா? அந்த மன அழுத்தம் குழந்தைகளின் கல்வியை பாதிக்காதா?. எனவே அரசு இதுபோன்ற விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கொண்டு ஆசிரியர் நியமனங்களை நடத்த வேண்டும் என்பதே என்னைப் போன்ற கல்வியாளர்களின் கோரிக்கை" என்றார்.

ஸ்டாலின்

தமிழக பள்ளிக்கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக 670 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 1003 நடுநிலைப்பள்ளிகள், 1235 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லாத நிலையில் வருகிற  07/06/2023 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை ஆசிரியர் சங்கத்தினர் முன் வைத்தனர்.

இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் சாமியிடம் பேசினோம், "பள்ளிகளைப் பொருத்தவரை 11, 12-ம் வகுப்புக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே கடந்த ஆண்டுகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். நடுநிலை பள்ளிகளுக்கு வகுப்பெடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசு தரப்பில் கேட்டால், தேவைக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதாவது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். 61 மாணவர் இருந்தால் 2 ஆசிரியர்கள் என்பதுதன் அரசின் மனிதவளக் கணக்கு. இதே போன்றுதான் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு பேராசிரியர்களை நியமித்தவர்கள், அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை நியமிக்கவில்லை. தலைமை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை 2 விதமான சிக்கல்கள் உள்ளன.

ஒன்று டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தான் தலைமை ஆசிரியராக முடியும் என்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பு. மற்றொன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அது இட ஒதுக்கீடு பிரச்னை. இயற்பியல் பாட ஆசிரியர் பணிக்கு தேர்வு நடைபெறுகிறது என்று வையுங்கள். OC பிரிவில், இயற்பியலில் 90 மதிப்பெண் பெற்ற ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவார். 50 மதிப்பெண் எடுத்த ST பிரிவைச் சேர்ந்தவரும் தேர்வு செய்யப்படுவார்.

நீதிமன்றம் தீர்ப்பு

இந்த இருவருக்கும் பதவி உயர்வு என்பது பணி மூப்பை வைத்து முடிவு செய்யப்படும். ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்கள் என்றால் வயதை வைத்து முடிவு செய்யப்படும். இதை எதிர்த்து 2013-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 2023-ம் ஆண்டு ஜனவரி தீர்ப்பு வெளியானது. அதாவது தமிழ்நாடு அரசின் 69 சதவிகித  இட ஒதுக்கீடு பணி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும். பதவி உயர்வுக்கு பொருந்தாது என்பதுதான் அந்த தீர்ப்பின் சாராம்சம்.  

இதை நடைமுறைப்படுத்தினால், ஆயுளுக்கும் ஒரு பழங்குடியினரோ, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களோ நிச்சயம் தலைமை ஆசிரியராக முடியாது. இதனால்தான் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலை இருக்கிறது. பொறுப்பு தலைமை ஆசிரியர்கள், அதே பள்ளியில் பணியாற்றுவதால் அவர்களுக்கு சக ஆசிரியர்களிடையே பெரிய மரியாதை இருக்காது. மாணவர்களுக்காக ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் அதிகாரமும் அவர்களுக்கு கிடையாது. அரசு-ஆசிரியர்கள்-நீதிமன்றம் இந்த முக்கோண சங்கிலி பிரச்னையில் பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்களின் கல்விதான்" என்றார்.



from Latest news https://ift.tt/iQnHGws

Post a Comment

0 Comments