ஆஸ்துமா, விஷக்கடி நோய்கள் தீர்க்கும் சாமுண்டேஸ்வரி கோயில்!

கடுமையான வெயில் காலம் முடிந்து இளவேனில் தொடங்கும் காலத்தில் தேள், பூரான், சிறுபாம்பு போன்றவை உலாவுவது சகஜம். அதுவும் நீங்கள் இருக்கும் பகுதியில் புதர்களும் மரங்களும் மண்டி இருந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும். குறிப்பாக குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். விஷக்கடி பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். தயவுசெய்து உங்கள் கை மருத்துவம் எதையும் முயல வேண்டாம். அதோடு, விஷக்கடியை விஷ நோய்களைத் தீர்த்து வைக்கும் இந்த சாமுண்டேஸ்வரியையும் மனத்தால் எண்ணி வழிபடுங்கள், உங்கள் துன்பங்கள் யாவும் தீர்ந்துபோகும் என்கிறார்கள் பெரியோர்கள்.

தமிழ்நாட்டு மைசூர் என்று போற்றப்படும் சோழ நாட்டுத் தலம் பூவனூர். இது அப்பர் பெருமானாலும் திருஞான சம்பந்தராலும் பாடப்பெற்ற தேவாரத் திருத்தலம். பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில், இது 103-வது தலம். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே அமைந்துள்ளது (அக்காலத்தில் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கிய வனங்கள் நிறைந்த இடமாக இருந்ததால், முன்பு இது புஷ்பவனம் என்றும் திருப்பூவனூர் என்றும் அழைக்கப்பட்டதாம்).

பூவனூரில் எழுந்தருளும் ஈசனின் திருநாமம் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் (உலக செஸ் போட்டியின்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஈசன் இவரே) உற்சவர் புஷ்பவனேஸ்வரர். இவருக்கு இணையாக கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி ஆகிய அம்பிகையரும் இங்கே அருள் பாலிக்கிறார்கள். இவர்களோடு அன்னை சாமுண்டீஸ்வரியும் இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருப்பது அபூர்வமானது என்கிறார்கள்.

1000 ஆண்டுகள் கடந்த இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாகக் காணப்படுகிறது. நீண்ட சுற்றுச்சுவர்களும், பரந்துவிரிந்த பிராகாரங்களும், அழகிய கல்மண்டபங்களும், கலை நுணுக்கம் கொண்ட விமானங்களும் என கலைப் பொக்கிஷமாகவும் உள்ளது இந்தக் கோயில். சுகப்பிரம்ம ரிஷி, நந்தி, அகத்தியர் உள்ளிட்ட பல ரிஷிகளும் சித்தர்களும் பூஜித்து வணங்கிய பெருமை இந்த ஊருக்கு உண்டு என்கிறார்கள்.

ஸ்ரீசதுரங்க வல்லபநாதர், ஸ்ரீகற்பகவல்லி, ஸ்ரீராஜராஜேஸ்வரி

அகத்திய முனிவர் மற்றும் நந்தி ஆகியோர் வணங்கிய கோயில் என்பதால் இங்கு இருவரும் தனித்தனியே சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். கருவறை கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்கை, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் சந்நிதிகளைக் காணலாம். தொழுநோயால் துயருற்ற தர்மவர்மன் என்ற அரசன், பூவனூருக்கு வந்து, கிருஷ்ண குஷ்டஹர புஷ்கரணியில் நீராடி ஈசனைத் தொழுதபோது, அவருடைய நோய் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இது பெருவியாதி தீர்க்கும் தலமாகவும் வணங்கப்படுகிறது.

ஊழிக்காலத்தே உலகம் யாவும் அழிந்த நிலையில், எங்கும் துர்நாற்றம் வீசியது. ஊழி முடிந்து வெள்ளம் வடிந்த நிலையில் இந்த ஊரில் மட்டும் மலர்கள் பூத்துக் குலுங்கி தெய்விக மணம் எழுந்ததாம். தேவர்கள் இந்த அதிசயத்தைக் காண வர, இங்கே சுயம்புவாக புஷ்பவனநாதர் என்ற புஷ்பவனேஸ்வரரும் அம்பாள் கற்பக வல்லியும் எழுந்தருளி, கோயில்கொண்டதாக ஐதீகம்.

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற விரும்புவோர் இங்குள்ள ஈசனை வழிபட்டு வெற்றியும் பெறுகிறார்கள் என்பது இவ்வூர் மக்களின் கூற்று. தென்னாட்டை ஆண்ட மன்னர் வசுசேனனுக்கு நீண்டகாலமாகக் குழந்தை இல்லை. அவனின் பக்திக்கு மெச்சிய ஈசன், அம்பிகையை மண்ணுலகுக்கு அனுப்பி மன்னனின் மகளாக வளரச் செய்தார். `ராஜராஜேஸ்வரி’ என்று திருநாமத்தோடு அம்பிகை வளர்ந்தும் வந்தாள். இவருக்குத் துணையாக சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டியும் வந்தார். ராஜராஜேஸ்வரியை சகல கலைகளிலும் சிறப்பானவராக அன்னை சாமுண்டி வளர்த்தாள். அதிலும் சதுரங்கப் போட்டியில் சிறப்பாக விளங்கினார் ராஜராஜேஸ்வரி.

விதிப்படி அன்னையை ஆட்கொள்ள எண்ணிய ஈசன், முதியவர் கோலத்தில் வந்து விளையாட்டில் வென்று மணம் புரிந்தார் என்கிறது தலவரலாறு. சதுரங்க விளையாட்டில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. ராஜராஜேஸ்வரியை வளர்த்த சாமுண்டேஸ்வரிக்கும் இங்கே தனிச் சந்நிதி உருவானது. விஷக்கடி, விஷ நோய்கள், ஆஸ்துமா போன்ற நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக இன்று விளங்கி வருகிறது.

கோயில் பிராகாரத்தில் ஸ்ரீகற்பகவல்லி அம்மையும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மையும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் ஸ்ரீசாமுண்டீஸ்வரி வடக்கு நோக்கி எழுந்தருளுகிறாள். இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து, கோயிலுக்கு அருகே உள்ள க்ஷீர புஷ்கரணி (பால்குளம்) மற்றும் பின்புறத்தில் உள்ள கிருஷ்ண குஷ்டஹர புஷ்கரணி ஆகிய தீர்த்தங்களில் நீராடி அல்லது புனித நீர் தெளித்துக் கொள்ள வேண்டும். சாமுண்டீஸ்வரி சந்நிதியில் வேர் கட்டிக்கொள்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதி வைத்தியர், விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார். பிறகு ஸ்ரீசாமுண்டிக்கு அர்ச்சனை செய்து விளக்கேற்ற வேண்டும். பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கிச் சாப்பிடவேண்டும். இதனால் உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக இறங்கி, பாதிப்பிலிருந்து மீள்கிறார்கள். இது காலங்காலமாக இங்கே நடந்துவரும் அற்புதம் என்கிறார்கள் பக்தர்கள்.

மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளில் ஸ்ரீசாமுண்டிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடைபெறும். இதில் பல பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, உடல் ஆரோக்கியம், திருமண வரம், குழந்தைப் பேறு மற்றும் பல குடும்ப கஷ்டங்கள் நிவர்த்திக்காக 27 நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர். போட்டியில் வெற்றி பெற ஸ்ரீசதுரங்கவல்லப நாதரும் மங்கல வாழ்வு பெற ஸ்ரீராஜராஜேஸ்வரியும் வேண்டியது கிடைத்திட ஸ்ரீகற்பகாம்பிகையும் இங்கே அருளுகிறார்கள். அதுபோலவே உடல் மற்றும் மனவியாதிகளை விரட்டும் மருத்துவச்சியாக ஸ்ரீசாமுண்டி விளங்குகிறாள். வாய்ப்பு உள்ளவர்கள் கும்பகோணம் சென்றால் இந்தத் தலத்துக்குச் சென்று அருளும் பொருளும் பெற தரிசித்து வரலாமே!

எப்படிச் செல்லலாம்: கும்பகோணத்திலிருந்தும் திருவாரூரிலிருந்தும் பூவனூருக்குச் செல்லலாம். மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில், மன்னார்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் நீடாமங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன. பாமணி ஆற்றங்கரையையொட்டி அழகுற அமைந்துள்ளது இந்த ஆலயம்.



from Latest news https://ift.tt/WosC3fn

Post a Comment

0 Comments