சாத்தூர்: திருமணம் மீறிய உறவால் ஏற்பட்ட முன்பகை; கோயில் திருவிழாவில் பெண் வெட்டிக்கொலை!

கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இடத்தில், முன்பகை காரணமாக பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் பேசுகையில், "விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகில் உள்ள கொட்டமடக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 33). இவர் சிங்கப்பூரில் வேலைக்கு சென்றுவிட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக சொந்த ஊர் திரும்பியுள்ளார். தற்போது, உள்ளூரில் கட்டட கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கொலை

இந்தநிலையில் அதே ஊரை சேர்ந்த சதீஷ்(20) என்பவருக்கும், மணிமாறனின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம், மணிமாறனுக்கு தெரியவரவும் சதீஷை கண்டித்துள்ளார். இந்த பிரச்னைக்கு பிறகு அவமானம் தாங்கமுடியாமல் சதீஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சதீஷின் திடீர் தற்கொலைக்கு மணிமாறன்தான் காரணம் என கருதிய அவரின் குடும்பத்தினர், மணிமாறனுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக, கொட்டமடக்கிப்பட்டியில் தனது வீட்டை காலிசெய்துவிட்டு, மனைவியின் சொந்த ஊரான சங்கரன்கோயிலில் மணிமாறன் தன்‌ குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

இந்தநிலையில் கொட்டமடக்கிபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் வைகாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்தத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மணிமாறன் தன் குடும்பத்துடன் கொட்டமடக்கிபட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்திருந்தார். இந்த தகவலை அறிந்த சதீஷ் குடும்பத்தினர், திருவிழாவில் வைத்து மணிமாறனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிமாறன், அரிவாளால் சதீஷின் அக்காள் முனீஸ்வரியை வெட்டியுள்ளார்.

முனீஸ்வரி

இதில் படுகாயம் அடைந்த முனீஸ்வரி உயிருக்கு போராடவும், அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச்சென்றனர். பலமான வெட்டுகாயம் காரணமாக, சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின், மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முனீஸ்வரி அனுப்பி வைக்கப்பட்டார்.

மணிமாறன்

இந்தநிலையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முனீஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச்சம்பவம் தொடர்பாக, முனீஸ்வரி குடும்பத்தினர் வெம்பக்கோட்டை போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்" என்றார். கோயில் பொங்கல் திருவிழாவுக்கு வந்த இடத்தில் முன்பகை காரணமாக பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



from Latest news https://ift.tt/ITnjD1m

Post a Comment

0 Comments