கரூர்: ஆண்கள் குடும்பநல அறுவை சிகிச்சையில் 2-ம் இடம், சாதித்தது எப்படி?

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை (வாசக்டமி) எளிதானது என்றாலும், ஆண்கள் பெரும்பாலும் அதைச் செய்து கொள்ள முன்வருவதில்லை. ஆனாலும், மாநிலங்களில் ஆண்களுக்கான இந்த அறுவை சிகிச்சைக்கு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில், ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் 2021 -ம் ஆண்டு நவம்பரில் ’தங்கத் தந்தை’ திட்டத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர் அறிமுகம் செய்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கர்

இத்திட்டத்தின் கீழ் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை, கடந்த 2021-22-ம் ஆண்டில் 5 மாதங்களில் மட்டும் 84 ஆக அதிகரித்தது.

தொடர்ந்து, 2022-23 - ம் ஆண்டில் 110 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 91 பேருக்கு (82.7 சதவீதம்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம், சதவிகித அடிப்படையில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேசிய சில அதிகாரிகள், ``கரூர் மாவட்டத்தில் மாதாந்திர ஆய்வுகள் மேற்கொண்டபோது, நிறைய குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் அதிகம் இருப்பதைக் காண முடிந்தது. அதிலும், இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. அதேபோல், பலரும் குடும்பநல அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தனர். அதனால், இங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தோம்.

பெண்களுக்குச் செய்யப்படும் டியூபெக்டமி குடும்பநல அறுவை சிகிச்சையை, அறுவை சிகிச்சை முறையிலோ, லேப்ரோஸ்கோப்பி முறையிலோ செய்ய வேண்டும். ஆனால், இதுவே ஆண்களுக்கு உயிர் அணுக்கள் வரும் பாதையை ரிங் மாதிரி போட்டு அடைத்தால் போதுமானது. பெண்களைவிட, ஆண்களுக்கு இதை செய்வது எல்லா வகையிலும் நல்லது. ஆனால், 'ஆண்களுக்கு செய்தால், அவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்' என்று சிலர் தவறாக நினைப்பதுதான், இதில் வருத்தமான விசயம்.

கருத்தடை

ஆண்கள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்வது, மனைவிக்கும், குடும்பத்துக்கும், குடும்பப் பொருளாதாரத்துக்கும், இந்தச் சமூகத்துக்கும் செய்யக்கூடிய பெரும் உதவி. அதை அவர்களுக்கு உணர்த்தத்தான், கரூர் மாவட்டத்தில், சர்வதேச ஆண்கள் தினத்தில், குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வரும் ஆண்களுக்கு, 'தங்கத் தந்தை' என்ற விருது கொடுக்க முடிவெடுத்தோம்.

பொதுவாக, இப்படி குடும்பநல அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு, அரசு ரூ. 2000-க்கும் குறைவாகத்தான் ஊக்கத்தொகை தருகிறது. ஆனால், நாங்கள் ஆட்சியரின் சுய உதவி நிதியில் இருந்து, தலா ரூ. 5,000 தருவதாக அறிவித்தோம். அல்லது அரசு மூலம் கிடைக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச வெள்ளாடுகள், வீடுகள், இலவச கறவை மாடுகள், மானியத்துடன் கூடிய கடன், வேளாண்மைத்துறை மூலம் கிடைக்கும் பசுமைக் குடில் அமைத்தல், சொட்டுநீர் பாசன வசதி என்று 10 திட்டங்களில் ஏதாவது ஒன்றில் முன்னுரிமை என்று அறிவித்தோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள தம்பதி இதற்குத் தகுதியானவர்கள்.

பல ஆண்கள் வாசக்டமி செய்துகொண்டு, 'தங்கத் தந்தை' விருதை பெற்றிருக்கிறார்கள். வரும் வருடம் இலக்கை 250 பேர் என்று நிர்ணயித்துள்ளோம். ஏற்கெனவே 'தங்கத் தந்தை' விருது பெற்றவர்கள், அதற்குத் தூதுவர்களாக இருப்பார்கள்.

ஒவ்வொரு தம்பதியும், இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் ஆசைப்படாமல், அதோடு குடும்பநல அறுவை சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும். எங்கள் திட்டத்தில், ஒரு குழந்தைக்குத் தந்தையான ஆணும், 8 குழந்தைகளுக்குத் தந்தையான ஆணும் வாசக்டமி சிகிச்சை பண்ணிக்கொண்டார்கள். தமிழ்நாடு முழுக்க, இதுபோல் ஆண்கள் அனைவரும் வாசக்டமி சிகிச்சையை செய்துகொள்ள வேண்டும். ஊர்கூடி தேர் இழுப்பதுபோல், அனைவரும் மனது வைத்தால்தான், மக்கள்தொகை பெருக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்றார்.

டியூபெக்டமி, வாசக்டமி சிகிச்சை முறைகள் பற்றி, மருத்துவத்துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

தங்கத் தந்தை விருது

``ஆண்களுக்கான கருத்தடை முறை என்பது, பெண்களுக்கு செய்யப்படுவதை விட, மிகவும் எளிமையானது. இதற்கு, மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும் என்று அவசியமில்லை. ஓ.பி நடைமுறையிலேயே பண்ணிக்கொண்டு போய்விட முடியும். மயக்க மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்களுக்கு மதமதப்பு ஊசிபோட்டு, சிறிய துளை மூலமாக விந்து செல்லக்கூடிய பாதையில் செய்யப்படும் எளிய சிகிச்சை முறை இது. சிகிச்சை முடிந்ததும் அன்றே வீட்டுக்குச் செல்ல முடியும். அதேபோல், அடுத்த நாளில் இருந்து அவர்கள் தங்கள் பணியைத் தொடங்கிவிடலாம். இதுதான், ஆண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையில் உள்ள அட்வான்டேஜ். அதே நேரம், பெண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முறையை பொறுத்தமட்டில், அவர்கள் முதலில் மருத்துவமனையில் அட்மிஷன் போட வேண்டும். அடுத்து, அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும். அதன்பிறகு, அறுவை சிகிச்சை மூலம் அவர்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்.

அல்லது லேப்ரோஸ்கோப்பி முறையில் செய்தாலும், 4 நாள்கள் வரை அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், வாசக்டமியில் அந்தப் பிரச்னை இல்லை. இதில், ஆண்கள் இந்த சிகிச்சைக்கு ஒத்துக்கொள்வது தான் முக்கியம். இந்த விசயத்தில், தங்கள் மனைவிகள் மீது ஆண்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த, இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, வாசக்டமி சிகிச்சையை செய்துகொள்ளலாம்.

வாசக்டமியில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. எப்போதும் போல் அவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியும். தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது ஏற்பட வேண்டிய விறைப்புத்தன்மையிலோ, விந்து வெளியேறும் எஜாகுலேஷனிலோ எவ்வித பாதிப்பும் வராது. அதனால், ஆண்மைக்குறைவு என்கிற பயம் தேவையே இல்லை. அதேபோல், வாசக்டமி ஒரு பாதுகாப்பான அறுவை சிகிச்சை. இந்த சிகிச்சையின்போது, ரத்தம் வருவதோ நோய்த்தொற்று ஏற்படுவதோ நடக்காது" என்றனர்.

இதுபற்றி, கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரபுசங்கரிடம் பேசினோம்.

மருத்துவர் பிரபுசங்கர் (கரூர் ஆட்சியர்)

``இன்னும் அதிக ஆண்களை வாசக்டமி செய்ய வைக்கும் முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு மருத்துவராகச் சொல்கிறேன், வாசக்டமி சிகிச்சைமுறை என்பது, காய்ச்சலுக்கு ஊசிபோடுவது மாதிரியானது தான். கொஞ்சம் பெரிய ஊசி அவ்வளவுதான் வித்தியாசம். அதேபோல், இதற்கு கணவர், மனைவி இருவரும் பரஸ்பரம் சம்மதிக்க வேண்டும். குடும்பநல அறுவை சிகிச்சையில் வெற்றியின் விகிதம், பெண்களுக்குச் செய்யப்படும் டியூபெக்டமி சிகிச்சை முறையைவிட, ஆண்களுக்குச் செய்யப்படும் வாசக்டமியில் அதிகம் உள்ளது.

கடந்த 25 வருடங்களாக வாசக்டமி அறுவை சிகிச்சையை இந்தியாவில் செய்கிறார்கள். 'நான் இருக்கிறேன் உனக்கு' என்று மனைவியிடம் வெறும் வார்த்தைகளில் சொல்வதைவிட, வாசக்டமியை செய்து கொண்டால், அன்பை இன்னும் கூடுதலாக உணர்த்த முடியும். அதேபோல், ஆண்களுக்கு வேறு எந்த நோய்கள் இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் தாராளமாக வாசக்டமி சிகிச்சையை செய்து கொள்ளலாம்" என்றார்.



from Latest news https://ift.tt/P8plsUr

Post a Comment

0 Comments