கரூர் மாவட்டம், மாயனூர் அருகே இருக்கிறது ராசாகவுண்டனூர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (72). அவரது தம்பி காத்தவராயன் (68). இருவருக்கும் இடையில் பூர்வீக விவசாய நிலங்கள் சம்பந்தமாக சொத்து பிரச்னை இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலப்பிரச்னை சம்பந்தமாக, அண்ணன், தம்பி குடும்பத்திற்குள் அடிக்கடி நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சிலதினங்களுக்கு முன்பு கருப்பண்ணன் வீட்டில் இருந்து செல்லும் போது, தனது மனைவியிடம் தோட்டத்திற்கு சென்று தென்னந்தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்சுவதாக கூறி சென்று விட்டு, நீண்ட நேரம் கடந்தும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது, தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கிடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, மாயனூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/d0b3dafa-34fa-4658-bbe5-8f08f970e2d5/karuppannan__2_.jpg)
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயற்சித்த போது, இறந்தவரின் மகள்கள், 'எங்களது அப்பாவை கொலை செய்தவர்களை கைது செய்யவேண்டும்' என உடலை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். இதனால், அவர்களிடம் கரூர் ஏ.டி.எஸ்.பி மோகன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம்படுத்தினார். பின்னர், கருப்பண்ணன் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்வதற்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அவரின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு கரூர் - திருச்சி சாலையில் கருப்பண்ணனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு பேச்சுவார்த்தையில் இரண்டு தினங்களில் அவர்களை கைது செய்யப்படும் என்று போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதற்கிடையில், மாயனூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து, கருப்பண்ணன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/b730fbe4-2c77-495c-adef-ad2491e211cb/kathavarayan__accused_.jpg)
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கருப்பண்ணனின் சகோதரர் காத்தவராயனை விசாரித்ததில், தனது குடும்பம் உறுப்பினர்கள் சேர்ந்துதான் தான் கருப்பண்ணனை கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கத்தவராயன், அவரது மனைவி பழனியம்மாள், மகன் சக்திவேல் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கருப்பண்ணனை கட்டையால் அடித்து கை, கால்கள் கட்டப்பட்டு உயிருடன் தென்னந்தோப்பில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால், மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர். நிலத்தகராறில் தம்பி குடும்பமே சேர்ந்து முதியவர் ஒருவரை எரித்துக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news https://ift.tt/PL6Dr7O
0 Comments