பார்வைக் குறைபாடு உள்ள இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பேரிழப்பு நிகழ்கிறது. அதற்கான காரணம் யார் என்ற தேடலும் பழிவாங்கலுமே `பாயும் ஒளி நீ எனக்கு'.
அதீத வெளிச்சம் இருந்தால் மட்டுமே இயல்பான பார்வை தெரியும். இல்லையெனில், பார்வையில் தெளிவிருக்காது. இப்படியொரு குறைபாடுள்ள இளைஞன் அரவிந்த்தாக விக்ரம் பிரபு. சொந்தமாக சாஃப்ட்வேர் பிசினஸ், அன்பான குடும்பம், நண்பர்கள் என வாழ்ந்து வருகிறார். தனக்கு இந்த மாதிரியான பார்வைக் குறைபாடு இருப்பதை நினைத்து கவலைப்படவோ வருத்தப்படவோ இல்லாமல் பாசிட்டிவிட்டியோடு இருக்கிறார்.
ஒரு நாள் இரவு ரோட்டில் ஒரு பெண்ணுக்கு இரண்டு நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுக்க, அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அங்கே தொடங்குகிறது பிரச்னை. இன்னொரு பக்கம், அரசியலில் பயங்கர செல்வாக்கு உடையவராக இருக்கும் வேல ராமமூர்த்தி. அவருக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் தனக்குக் கிடைக்க வேண்டுமென நினைக்கும் அவரது அரசியல் வாரிசு தனஞ்செயா. இவர் எப்படி அடுத்த அண்ணாமலையாரானார், விக்ரம் பிரபு வாழ்க்கைக்குள் எப்படி நுழைகிறார், அவரின் இழப்புக்கு இவர் ஏன் காரணமாகிறார் என இரு கதைகளையும் இணைத்து த்ரில்லர் படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத்.
மற்ற படங்களில் பார்க்கும் அதே விக்ரம் பிரபுதான் இந்தப் படத்திலும் என்றாலும் ஸ்டன்ட் காட்சிகளில் கவனம் பெறுகிறார். வாணி போஜனுக்கு வழக்கத்திலும் வழக்கமான கதாபாத்திரம். டெம்ப்ளேட் நண்பனாக விவேக் பிரசன்னா. விக்ரம் பிரபுவை வளர்க்கும் அப்பாவாக ஆனந்த் நடித்திருக்கிறார். 'உனக்கு ஒண்ணுனா என்னால ஏத்துக்க முடியாது', 'உனக்கு ஒண்ணுனா எப்படி சும்மா இருக்கமுடியும்' என அன்பைப் பொழியும் பாச அப்பாவாக இருக்கும் சித்தப்பா. அடுத்த அண்ணாமலையாராக வேண்டும் என்பதற்கு எதையும் செய்யத் துணியும் ஜகன் (கன்னட நடிகர் தனஞ்செயா) வழக்கமான உருட்டல் மிரட்டல் வில்லன்.
பாரதியாரின் 'பாயும் ஒளி நீ எனக்கு' கவிதையை இரண்டு இடத்தில் வைத்தும் நாயகனின் பார்வை குறைபாட்டோடு தொடர்புப்படுத்தியும் படத்தின் டைட்டிலுக்கு நியாயம் சேர்க்க நினைத்திருப்பது உஷ்ஷ்ஷ்..! 'போர்டு எல்லாம் புதுசு புதுசா மாத்துற. ஆனா, பழைய டீ தூளை மட்டும் மாத்தவேமாட்டிங்கிற' என்ற வடிவேலுவின் வசனம் போல ஹீரோ - ஹீரோயினின் காஸ்ட்யூமிற்கு செய்த மெனக்கெடலை கதாபாத்திரத்தின் வடிவமைப்பிலும், திரைக்கதையிலும் செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நாயக - நாயகியின் முதல் சந்திப்பு தொடங்கி பல காட்சியமைப்புகள் பழைய ஃபார்மேட்டில் கடந்துபோகின்றன. சுவாரஸ்யமான காட்சிகள் படத்தில் எதுவுமே இல்லை என்பது வருத்தமான ஒன்று.
த்ரில்லர் படத்தின் பலமே அதன் திரைக்கதைதான். ஆனால், யூகிக்கக்கூடிய திரைக்கதையைத் தாண்டி வசனங்களே யூகிக்கக்கூடியதாக இருந்தது பெரும் மைனஸ். ஹீரோவுக்கு நிகழும் பேரிழப்புக்கான காரணம் அழுத்தமில்லாமல் இருப்பது சறுக்கல். வெளிச்சம் கிடைக்க வேண்டி நாயகன் எடுக்கும் முயற்சிகள் கவனிக்க வைக்கின்றன. மற்றபடி சுமாரான காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் தடுமாறியிருக்கிறார் இயக்குநர்.
பாடல்கள் எதுவும் ஈர்க்கவில்லை. சுவாரஸ்யமற்ற திரைக்கதைக்கு சாகரின் பின்னணி இசை கொஞ்சம் முட்டுக்கொடுத்து நிற்கிறது. கதாநாயகன் பார்வையில் காட்சி நகரும்போது ஒளிப்பதிவில் கவனம் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர். சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார் ஸ்டன்ட் இயக்குநர் தினேஷ் காசி. `கொடுத்த ஃபுட்டேஜில் என்னால் என்ன பண்ண முடியுமோ, பண்றேன்' என்ற டோனில் எடிட் செய்திருக்கிறார், சி.எஸ்.பிரேம். க்ளைமாக்ஸை நெருங்க நெருங்க 'எப்பங்க முடிப்பிங்க?' என்ற கேள்வியோடு வாட்ச்சைப் பார்க்க நேரிடுகிறது. படம் என்னவோ 1 மணி நேரம் 59 நிமிடம்தான். ஆனால், நம் பொறுமையை ரொம்பவே சோதித்து வெளியே அனுப்புகிறார்கள்.
பார்வையில் பிரச்னை என்பது சுவாரஸ்யமான ஐடியாதான். ஆனால், ரொம்பவே சுமாரான படைப்பாக தோன்றி அணைந்து போகிறது இந்த `பாயும் ஒளி நீ எனக்கு'.
from Latest news https://ift.tt/tMwUy7J
0 Comments